4-வது பெண் குழந்தைக்கு தாய் ஆனார் ‘வொண்டர் வுமன்’ கால் கடோட் - பிரபலங்கள் வாழ்த்து

4-வது பெண் குழந்தைக்கு தாய் ஆனார் ‘வொண்டர் வுமன்’ கால் கடோட் - பிரபலங்கள் வாழ்த்து
Updated on
1 min read

சென்னை: ‘வொண்டர் வுமன்’ கதாபாத்திரம் மூலம் பிரபலமான நடிகை கால் கடோட் 4வது குழந்தையை வரவேற்றிருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

டிசி காமிக்ஸின் ‘வொண்டர் வுமன்’ கதாபாத்திரம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. இதை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘வொண்டர் வுமன்’ திரைப்படங்களில் நடித்து வரவேற்பை பெற்றவர் கால் கடோட். ’பேட்மேன் v சூப்பர்மேன்’, ‘‘வொண்டர் வுமன்’, ‘வொண்டர் வுமன் 1984’, ‘ஜஸ்டிஸ் லீக்’ உள்ளிட்ட படங்களில் ‘வொண்டர் வுமன்’ கதாபாத்திரத்தில் கால் கடோட் தோன்றியுள்ளார்.

இந்த நிலையில், 38 வயதாகும் கால் கடோட் தனது 4-வது பெண் குழந்தையை வரவேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தன் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், “எனது அன்பு மகளே, வருக. பிரசவம் என்பது எளிதானது அல்ல. எனினும் நாங்கள் அதனை கடந்து வந்துள்ளோம்.

எங்கள் வாழ்க்கையில் வெளிச்சத்தை கொண்டு வந்த உனக்கு, அதற்கு ஏற்றவாறு ‘ஓரி’ என்று பெயர் சூட்டியுள்ளோம். ஹீப்ரூ மொழியில் அதற்கு, ’என்னுடைய ஒளி’ என்று பொருள். எங்கள் இதயம் நன்றியுணர்வால் நிரம்பியிருக்கிறது. பெண்கள் நிறைந்த எங்கள் வீட்டுக்கு உன்னை வரவேற்கிறேன். அப்பாவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

கால் கடோட்டின் பதிவுக்கு நடிகை காஜல் அகர்வால், ஹாலிவுட் நடிகர் வின் டீசல் உள்ளிட்டோ வாழ்த்து தெரிவித்துள்ளனர். கால் கடோட்டுக்கு ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. டிஸ்னி தயாரிக்கும் ‘ஸ்னோ ஒயிட்’ படத்தில் நடித்து வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in