ஹார்வீ வைன்ஸ்டீன் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்: மவுனம் கலைத்த உமா துர்மேன்

ஹார்வீ வைன்ஸ்டீன் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்: மவுனம் கலைத்த உமா துர்மேன்
Updated on
1 min read

பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வீ வைன்ஸ்டீன் தனக்கும் பாலியல் தொந்தரவு அளித்ததாக நடிகை உமா துர்மேன்(47) குற்றஞ்சாட்டியுள்ளார்.

'தி ஆர்டிஸ்ட்', 'தி இமிடேஷன் கேம்', 'ஜாங்கோ அன்செயிண்ட்' உள்ளிட்ட பல படங்களை தயாரித்த வைன்ஸ்டீன் கம்பெனியின் துணை நிறுவனர் ஹார்வீ வைன்ஸ்டீன் நடிகைகளுக்கு பல வருடங்களாக பாலியல் துன்புறுத்தல் தந்து வந்ததாக வெளியான செய்தி சமீபகாலமாக ஹாலிவுட்டில் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, ரோஸ் மெக்கவுன், க்வெனித் பேல்ட்ரோ உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட நடிகைகள் ஹார்வீயால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறிய நிலையில் தற்போது அந்த வரிசையில் உமா துர்மேனும் இணைந்துள்ளார்.

நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், கடந்த அக்டோபர் மாதமே இந்த சர்ச்சை வெளியே வந்தாலும் கோப ஆவேசத்தில் உடனே பேசிவிடாமல் பொறுத்திருந்து பேச வேண்டும் என்பதற்காகவே காத்திருந்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

நியூயார்க் டைம்ஸ் கட்டுரையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

25 ஆண்டுகளுக்கு முன்னதாக லண்டன் நகரின் சவோய் விடுதியில் வைன்ஸ்டைன் என்னிடம் முறைகேடாக நடந்து கொண்டார். அவர் என்னை கீழே தள்ளி தவறு செய்ய முயன்றார். விரும்பத்தகாத எல்லா செயல்களையும் அவர் செய்தார். ஆனால், என்னை அவர் கட்டாயப்படுத்தவில்லை.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

இது குறித்து வைன்ஸ்டீனின் வழக்கறிஞர், உமா துர்மேனின் குற்றச்சாட்டால் எனது கட்சிக்காரர் வேதனை அடைந்துள்ளார். உமாவிடம் தவறான வார்த்தைகளைப் பேசியிருக்கிறார் அதற்காக உடனடியாக மன்னிப்பும் கோரியிருக்கிறார். ஆனால், உமாவின் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு போலியானது எனத் தெரிவித்துள்ளார்.

வைன்ஸ்டீனுடன் உமா துர்மேன் பல்ப் பிக்‌ஷன், கில் பில் ஆகிய இரண்டு வெற்றிப் படங்களில் பணியாற்றியிருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in