‘ஓப்பன்ஹெய்மர்’ படத்துக்கு 5 கோல்டன் குளோப் விருது
லாஸ் ஏஞ்சல்ஸ்: சினிமாவில், ஆஸ்கருக்கு இணையாக உலக அளவில் கருதப்படுவது கோல்டன் குளோப் விருது. ஒவ்வொரு வருடமும் இந்த விருது விழா நடைபெறுவது வழக்கம். 81-வது கோல்டன் குளோப் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பிரேவர்லி ஹில்டன் நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது. ஏராளமான ஹாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த படத்துக்கான விருது ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்துக்கும் இதன் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனுக்குச் சிறந்த இயக்குநருக்கான விருதும் வழங்கப்பட்டன. நோலன் பெறும் முதல் கோல்டன் குளோப் விருது இது. மேலும் ‘ஓப்பன் ஹெய்மர்’ படத்தில் நாயகனாக நடித்த சிலியன் மர்பிக்கு சிறந்த நடிகருக்கான விருதும் இதில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியருக்கு, துணை நடிகருக்கான விருதும் சிறந்த பின்னணி இசைக்கான விருது லுட்விக் கோரன்சனுக்கும் வழங்கப்பட்டன.
சிறந்த நடிகைக்கான விருது ‘கில்லர்ஸ் ஆஃப் தி மூன்’ படத்துக்காக லில்லி கிளாஸ்டனுக்கு வழங்கப்பட்டது. சிறந்தநடிகை (மியூசிக்கல்/ காமெடி) விருது ‘புவர் திங்ஸ்’ படத்துக்காக எம்மா ஸ்டோனுக்கும் ஆங்கிலம் அல்லாத பிறமொழி படத்துக்கான விருது, ஜஸ்டின் டிரெய்ட் இயக்கிய பிரெஞ்சு படமான ‘அனாடமி ஆஃப் எ ஃபால்’ படத்துக்கும் கிடைத்துள்ளது. சிறந்தவசூல் சாதனை படதுக்கான விருது ‘பார்பி’க்கும் சிறந்த டிவி தொடருக்கான (டிராமா) விருது ஹெச்பிஓ சேனலில் ஒளிபரப்பான ‘சக்ஸசன்’ தொடருக்கும் வழங்கப்பட்டன.
கோல்டன் குளோப் விருது பெற்ற படங்களுக்கே ஆஸ்கர் விருதுகளும் கிடைக்கும் என்பதால் ஆஸ்கர் விருதிலும் ‘ஓப்பன்ஹெய்மர்’ ஆதிக்கம் செலுத்தும் என்கிறார்கள்
