

'தோர்' நாயகன் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், அதிகாரப்பூர்வமாக அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதை நிறுத்தியிருக்கிறார். 'தோர்' கதாபாத்திரத்தை விட்டு வருவது கலக்கத்தைத் தருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
34 வயதான கிறிஸ், மார்வெல் சினிமாட்டிக் சூப்பர் ஹீரோ உலகில் 'தோர்' என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார். 'அவெஞ்சர்ஸ்' பட வரிசையிலும் இந்த கதாபாத்திரம் இடம்பெற்றிருந்தது. கிறிஸ் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
"ஒப்பந்தப்படி, ஆமாம். இதுதான். நடித்து முடித்துவிட்டேன். இனி இந்த கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன். இந்த கணம் கலக்கமாக இருக்கிறது. இது என்றும் முடியாத பயணம் என்றே தோன்றியது. ஆனால் இப்போது முடிந்து விட்டது.
அடுத்த 2 அவெஞ்சர்ஸ் படங்களில் 76 கதாபாத்திரங்கள் உள்ளன. இதுவரை எடுக்கப்பட்டதில் மிகப்பிரம்மாண்ட திரைப்படமாக அது இருக்கும். எனது கதாபாத்திரத்தின் வலிமையை விட பெரியதாக இருக்கும். மீண்டும் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பேனா என்பது போகப் போகத் தெரியும்." என்று கிறிஸ் பேட்டியளித்துள்ளார்.
கடைசியாக 'தோர் ராக்னராக்' படத்தில் கிறிஸ் நடித்திருந்தார். அடுத்து 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்' படத்தில் தோன்றவுள்ளார். அடுத்த வருடம் 'அவெஞ்சர்ஸ் 4'ஆம் பாகம் வெளியாகவுள்ளது.