அமெரிக்க பாப் பாடகர் புருனோ மார்ஸ்க்கு 6 கிராமி விருதுகள்: “24 கே மேஜிக்” சிறந்த பாடலாகத் தேர்வு

அமெரிக்க பாப் பாடகர் புருனோ மார்ஸ்க்கு 6 கிராமி விருதுகள்: “24 கே மேஜிக்” சிறந்த பாடலாகத் தேர்வு
Updated on
1 min read

அமெரிக்காவில் இசைத் துறையில் வழங்கப்படும் உயரிய கிராமி விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டு வழங்கபட்டன. இதில் அமெரிக்க பாப் இசைபாடகர் புருனோ மார்ஸ் 6 கிராமிய விருதுகளைத் தட்டிச் சென்றார்.

அவர் இசை அமைத்து, எழுதி, பாடிய “ 24 மேஜிக் “ எனும் பாடல் 2018ம் ஆண்டின் சிறந்த பாடலாகத் தேர்வு பெற்றது.

அமெரிக்க இசைத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு கிராமி விருதுகள் கடந்த 1959-ம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த 2018-ம் ஆண்டு, 60-வது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மேடிசன் அரங்கில் நேற்று நடந்தது.

இதுவரை அமெரிக்காவின் லாஸ்ஏஞ்செல்ஸ் நகரில் மட்டுமே நடந்து வந்த கிராமி விருதுகள் வழங்கும் விழா முதல் முறையாக நியூயார்க் நகரில் இந்த முறை நடத்தப்பட்டது.

கிராமி விருதுகள் வழங்கும் விழாவுக்கு அமெரிக்காவின் புகழ்பெற்ற பாப் இசை கலைஞர்கள், பாடகர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் பலர் வந்திருந்தனர். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. கிராமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியை ஜேம்ஸ் கார்டன் தொகுத்து வழங்கினார்.

அமெரிக்காவின் பாப் இசை பாடகர் புருனோ மார்ஸ்க்கு 6 கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டன. இவர் 7 பிரிவுகளுக்கு விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட நிலையில், 6 விருதுகளைப் பெற்றார்.

இவர் இசை அமைத்து பாடிய “ 24 கே மேஜிக்” எனும் ஆல்பம் பாடல் 2018ம் ஆண்டின் சிறந்த பாடலாகவும் தேர்வு செய்யப்பட்டது.

32 வயதான மார்க்ஸுக்கு சிறந்த பாடகர், சிறந்த பாடல் ஆசிரியர் விருதும், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன.

2-வதாக 5 கிராமி விருதுகளை கென்ட்ரிக் லாமர் பெற்றார். சிறந்த ராப் ஆல்பமாக கென்ட்ரிக்கின் “டாமன்” ஆல்பமும், சிறந்த ராப் பாடலாக “ஹம்பில்” பாடலும், சிறந்த ராப் பாடகராக “ஹம்பில்” ஆல்பத்தில் நடித்த கென்ட்ரிக் லாமரும் தேர்வாகினர். மேலும், சிறந்த இசை வீடியோக்கான விருதும், ஹம்பில் ஆல்பத்துக்காக கென்ட்ரிக் பெற்றார்.

இது மட்டுமல்லாமல், எட் ஷீரன் இரு கிராமி விருதுகளைப் பெற்றார். இவரின் சிறந்த பாப் ஆல்பமாக “ டிவைட்” ஆல்பமும், தனிப்பாடகராக, “ஷேப் ஆப் வியு“ ஆல்பத்தில் பாடியதற்காக எட் ஷீரனுக்கு விருதும் வழங்கப்பட்டது.

சிறந்த புதுமுக கலைஞருக்கான கிராமி விருது ஆலிசியா காராவுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் இடையே பாப் பாடகர்கள் லேடி காகா, சாம் ஸ்மித், பிங்க், லூயிஸ் பான்சிஸ் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளும் நடந்தன. மேலும், எரிக் சர்ச், மாரின் மோரிஸ், பிரதர்ஸ் ஆஸ்போர்ன் ஆகியோரின் நிகழ்ச்சிகளும் நடந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in