

‘மா
ஸ்டர் ஆஃப் நன்’ (Master of None) என்ற ஹாலிவுட் தொலைக்காட்சித் தொடரில் நடித்த அசிஸ் அன்சாரி சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருதைப் பெற்றிருக்கிறார். கோல்டன் குளோப் விருதை முதன்முதலாகப் பெற்றிருக்கும் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற ஆசியர் அசிஸ் அன்சாரி என்று உலகப் பத்திரிகைகள் புகழ்கின்றன. அவரது பெற்றோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தந்தை சவுகத் அன்சாரியின் ஊர் திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் பயின்ற முதல் குழு மாணவர்களில் ஒருவர். இப்போது அமெரிக்காவின் கரோலினாவில் புகழ்பெற்ற குடல் இரைப்பை மருத்துவர். தாய் பாத்திமா, குமரி மாவட்டம் இடலாக்குடியைச் சேர்ந்தவர். அந்தத் தொடரில் அசிஸின் பெற்றோராக உண்மையான பெற்றோரே நடித்துள்ளனர்.
‘‘வாசுதேவநல்லூரின் அவரது தந்தைவழிப் பாட்டி தில்ஷத் இருக்கிறார். அவரைப் பார்க்கவும், திருமண நிகழ்ச்சிகளுக்காகவும் அசிஸ் வருவார். அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தாலும் அசிஸ் நன்றாக தமிழ் பேசுவார். மிகவும் அமைதியான, எளிமையான பையன். அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் குழந்தைகள் இவரது தொடரின் தீவிர ரசிகர்கள். அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கும் அசிஸ் பலமுறை சென்றுள்ளார்’’ என்று பெருமிதத்தோடு கூறுகிறார் அசிஸின் உறவினரும், குழந்தைகள் மருத்துவருமான டாக்டர் ஹபிபுல்லா. இவரும் இடலாக்குடியைச் சேர்ந்தவர். அசிஸ், சென்னை வந்த போது இவரது வீட்டுக்கு வந்திருக்கிறார்.
தொடரின் ஃப்ளாஷ்பேக் காட்சியில் அன்சாரியின் நினைவுகள் பின்னோக்கி திரும்பும். திரையில் ‘திருநெல்வேலி - 1958’ என்று குறிப்பிடப்படும். பின்னணியில் ‘பொன்னந்தி மாலைப்பொழுது’ என்ற எம்ஜிஆர் பாடல் ஒலிக்கும்.
விளையாடிக் கொண்டிருக் கும் நண்பன், ‘‘என்னடா இது?’’ என்பார். ‘‘என்னோட அபா கஸ்டா’’ என்று அசிஸ் சொல்ல, அதைத் தரையில் போட்டு உடைப்பார் நண்பன். பின்னர் அசிஸ், ‘‘அப்பா! நான் டாக்டருக்கு படிக்கப் போறேன்” என்று கூற, ‘‘மொதல்ல நம்ம பேக்டரியிலே வேலை செய்” என்பார் தந்தை. இப்படி, ஹாலிவுட் தொடரில் தமிழ் வசனங்களை இடம்பெறச் செய்து, அமெரிக்கர்களை ரசிக்கவைத்து, கோல்டன் குளோப் விருதையும் வென்று சாதித்துள்ளார் தமிழன் அசிஸ்.