

ஆஸ்கர் விருதுகளுக்கான தெரிவுப் பட்டியலில் இடம் பெறுவதற்கான போட்டியில் முதல் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியிருக்கிறது 'நியூட்டன்' திரைப்படம்.
மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் வனப்பகுதிகளில் நேர்மையாகத் தேர்தல் நடத்த முயலும் தேர்தல் அதிகாரி நியூட்டன் குமாரின் போராட்டத்தைப் பற்றிப் பேசும் படம் 'நியூட்டன்'.
அமித் மசூர்கார் இயக்கியுள்ள இப்படத்தில், ராஜ்குமார் ராவ், பங்கஜ் த்ரிபாதி, ரகுவீர் யாதவ் மற்றும் அஞ்சலி பாட்டீல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இத்திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான தெரிவுப் பட்டியலில் இடம் பெறுவதற்கான போட்டியில் நுழைந்தது. இது தேசம் முழுவதும் பெருமையாகப் பேசப்பட்டது. இதுவரை எந்தவொரு இந்தியப் படமும் சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதைப் பெற்றதில்லை. கடைசியாக கடந்த 2001-ம் ஆண்டு ஆமீர்கானின் லகான் திரைப்படம் 'ஃபைனல் ஃபைவ்' எனப்படும் இறுதியான 5 படங்களைக் கொண்ட தெரிவுப்பட்டியலில் இடம்பெற்றதே நமக்கான அதிகபட்ச சாதனையாக இருக்கிறது.
இந்நிலையில், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நியூட்டன் ஆஸ்கர் சிறந்த படத்துக்கான தெரிவுப் பட்டியலில் இடம்பெறும் போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேறியிருக்கிறது.
அடுத்த சுற்றுக்கு, ஏ ஃபென்டாஸ்டிக் வுமன் (சிலி), இன் தி ஃபேட் (ஜெர்மனி), ஆன் பாடி அண்ட் சோல் (ஹங்கேரி), ஃபாக்ஸ்ட்ராட் (இஸ்ரேல்), தி இன்சல்ட் (லெபனான்) லவ்லெஸ் (ரஷ்யா), ஃபெலிசைட் (செனகல்), தி ஊண்ட் (தென் ஆப்பிரிக்கா), தி ஸ்கொயர் (ஸ்வீடன்) ஆகிய 9 படங்கள் முன்னேறியுள்ளன.