

டஸ்டின் ஹாஃப்மேன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என எழுத்தாளர் அன்னா க்ரஹம் ஹண்டர் தெரிவித்துள்ளார்.
ஹார்வீ வீன்ஸ்டீன் சர்ச்சையைத் தொடர்ந்து ஹாலிவுட்டில் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் அனுபவங்கள் பற்றி வெளிப்படையாகப் பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது தி க்ராஜுவெட், ரெய்ன் மேன், க்ரேமர் வெர்ஸஸ் க்ரேமர் உள்ளிட்ட பல படங்களில் நடித்த, ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் டஸ்டின் ஹாஃப்மேன் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
32 வருடங்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சிப் படத்தின் படப்பிடிப்பில் உதவியாளராக இருந்த தன்னை டஸ்டின் பாலியல் ரீதியாக சீண்டினார் என அன்னா க்ரஹம் ஹண்டர் என்ற பெண் எழுத்தாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
தான் அங்கு செலவிட்ட 5 வாரங்களில், தனக்குக் கிடைத்த அனுபவங்கள் குறித்து அன்னா குறிப்பெடுத்துள்ளார். அதை தற்போது ஒரு கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இந்தக் கதையை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். எனக்குத் தெரிந்த ஒருவருக்கு இந்தக் கதை தெரியாது எனும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. கதை இப்படித் தொடங்கும், 'எனது 17வது வயதில் டஸ்டின் ஹாஃப்மென் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்'.
அவர் வெளிப்படையாகவே என்னிடம் நெருக்கமாகப் பேசினார். என் பின்புறத்தை பிடிப்பார். உறவு வைத்துக் கொள்வது பற்றி என்னிடமும், என் முன்னிலையிலும் பேசுவார். ஒருநாள் அவரது காலை உணவு குறித்து கேட்க அவரது அறைக்குச் சென்றேன். என்னைப் பார்த்து சிரித்தார். நன்றாக வேக வைத்த முட்டையை சாப்பிடுகிறேன் என்று சொல்லிவிட்டு, என் அந்தரங்க பாகத்தைக் குறிப்பிட்டு ஆபாசமாகப் பேசினார்.
அவரைச் சுற்றியிருந்தவர்கள் வாய்விட்டு சிரித்தார்கள். நான் அதிர்ச்சியாக அங்கிருந்து வெளியேறினேன். பாத்ரூமுக்கு சென்று அழுதேன். முதலில் சிலரிடம் இந்தக் கதையைப் பற்றி சொல்லும்போது, அவர் ஆபாசமாகப் பேசியதை குறிப்பிடவில்லை. ஆனால் அதைப் பற்றி குறிப்பிடும்போதெல்லாம் என் குரல் உடையும். ஆனால் தொடர்ந்து அதைப் பற்றி பேசி பழகிக்கொண்டேன்.
ஆம், நான் டஸ்டினின் கவனத்தை ஈர்த்தது எனக்கு பிடித்தது. ஆனால் ஒரு கட்டத்தில் பிடிக்கவில்லை. அவர் ஹாலிவுட்டில் எந்த மாதிரியானவர் என்பது புரிந்தது. வழக்கமாக ஒரு பெண் ஹாலிவுட்டில் அனுபவிப்பது புரிந்தது. அவர் ஓர் இரை தேடுபவர், நான் ஒரு சிறுமி, அவர் செய்தது பாலியல் துன்புறுத்தல்." இவ்வாறு அன்னா அந்த கட்டுரையில் எழுதியுள்ளார்.
இது பற்றி ஹாஃப்மேனிடம் கேட்டபோது, "எனக்கு பெண்கள் மீது அளவுகடந்த மரியாதை உள்ளது. நான் செய்த ஏதோ ஒன்று அவரை அசவுகரியமான சூழலுக்கு தள்ளிவிட்டது என்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் அவர் சொல்வது, நான் யார் என்பதன் உண்மையான பிரதிபலிப்பு அல்ல" என்று கூறினார்.