

நடிகர் கெவின் ஸ்பேஸிக்கு கொடுக்கவிருந்த எம்மி விருதை திரும்பப் பெறுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் பாலியல் சர்ச்சையில் சிக்கிய கெவின் ஸ்பேஸி, அது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கேட்டதோடு, தான் ஒரு தன்பாலின உறவில் இருப்பவன் என்பதையும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, 30 வருடங்களுக்கு முன் தவறு செய்துவிட்டு இப்போது நல்லவர் போல ஒப்புக்கொள்வதை ஏற்க முடியாது என்றும், இந்த பிரச்சினையை திசை திருப்ப அவர் தான் ஓரின சேர்க்கையாளனாக காட்டிக் கொள்வதாகவும் பல தரப்பு மக்கள் கெவின் ஸ்பேஸியை சாடியுள்ளனர்.
இந்நிலையில், எல்லைகள் தாண்டி, சினிமா என்ற கலை வடிவத்துக்கு ஆற்றிய பங்களிப்புக்காக, கெவின் ஸ்பேஸிக்கு எம்மி அமைப்பு விருதினை அறிவித்திருந்தது. தற்போது அதைத் திரும்பப் பெறுவதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. எம்மியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "சமீபத்திய நிகழ்வுகளின் காரணமாக, கெவின் ஸ்பேஸிக்கு அளிக்கப்படவிருந்த 2017ஆம் வருடத்துக்கான எம்மி நிறுவனர்கள் விருதை, சர்வதேச அகாடமி திரும்பப் பெறுவதாக அறிவிக்கிறது" என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 20ஆம் தேதி இந்த விருது வழங்கும் விழா நியூயார்க் நகரில் நடைபெறவுள்ளது.
மேலும், ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ் என்ற புகழ்பெற்ற தொடரில் கெவின் ஸ்பேஸி நடித்துவருகிறார். அதன் தயாரிப்பு நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ், இதே காரணத்துக்காக தொடரை ரத்து செய்துள்ளது.
முன்னதாக, நடிகர் அந்தோணி ராப், தனது 14வது வயதில், கெவின் ஸ்பேஸியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.