ஹாலிவுட் நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் விவகாரம்: ட்விட்டரில் டிரெண்டாகும் #MeToo ஹாஷ்டேக்
பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நடிகைகளுக்கு ஆதரவாக ட்விட்டரில் பெண்கள் பலரும் தங்களது பாலியல் துன்புறுத்தல் அனுபவங்களை#MeToo என்ற ஹாஷ்டேக்கில் பதிவிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர்.
ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் (65). இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகைகள், பெண் உதவியாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கடந்த வாரம் ‘நியூ யார்க் டைம்ஸ்’ விரிவான செய்தி ஒன்றை வெளியிட்டது.
ஹாலிவுட்டின் பிரபல நடிகைகளான ஏஞ்சலினா ஜோலி, ரோஸ் மெக்கவுன், க்வெனித் பேல்ட்ரோ ஆகியோரும் ஹார்வி மீது பாலியல் புகார் அளித்தனர்.
தயாரிப்பாளர் ஹார்வி மீதான இந்த பாலியல் புகார்கள் ஹாலிவுட் உலகில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஹார்வியால் தனக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து மெக்கோவன் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். தொடர்ந்து அவர் பதிவு செய்த ட்வீட்களில் தனிப்பட்ட மொபைல் எண்ணைப் பகிர்ந்ததால், அது விதிமுறை மீறல் என அவரது கணக்கை ட்விட்டர் முடக்கியது.
இதனைத் தொடர்ந்து #WomenBoycottTwitter என்ற ஹாஷ்டேக்கை மெக்கோவன் பயன்படுத்த அதனை ட்விட்டர் வாசிகளும் பதிவிட்டு ட்ரெண்ட் ஆக்கினர்.
ஹார்வி வெய்ன்ஸ்டீனால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான நடிகைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பெண்கள் அனைவரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை ட்விட்டர் பதிவுகளாகயிட்டு #MeToo என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
ஆண்கள் பலரும் பெண்களின் இந்த பதிவுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
திமுக எம்.பி, கனிமொழி அவர்களும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் #MeToo என்ற ஹாஷ்டேக்கை பார்க்கும்போது ட்விட்டரில் சில பெண்கள் மட்டும்தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லை என்பது தெரிகிறது என்று பதிவிட்டுள்ளார்.
