Last Updated : 04 Jan, 2017 03:42 PM

 

Published : 04 Jan 2017 03:42 PM
Last Updated : 04 Jan 2017 03:42 PM

பார்வை: பாஜிராவ் மஸ்தானி - அன்புக்கு மதம் தேவையில்லை!

நாள்: ஜன.5 | திரையரங்கு: ஐநாக்ஸ் - 3 | நேரம்: பிற்பகல் 2:15

'பாஜிராவ் மஸ்தானி'யில் பதினெட்டாம் நூற்றாண்டு மராத்தியப் பிரதம மந்திரி முதலாம் பாஜிராவ் பல்லாள்பட்டின் காதல் கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. 'உலகின் எல்லா மதங்களும் அன்பைப் போதிக்கின்றன, ஆனால், அன்புக்கு எந்த மதமும் கிடையாது, ஏனென்றால் அன்பே ஒரு மதம்தான்' - இதைத்தான் 'பாஜிராவ் மஸ்தானி' நிரூபிக்க முயற்சித்திருக்கிறது.

பேஷ்வா பாஜிராவ் - I , சத்திரபதி ஷாஹுவின் பிரதமராக ஒன்றுபட்ட இந்து ராஜ்ஜியத்தை உருவாக்குவதற்காக முகலாயர்களை எதிர்த்து நாற்பது போர்களை வென்றவர். புந்தேல்கண்ட்டின் இளவரசி மஸ்தானிக்கும், பாஜிராவுக்கும் இருந்த மதங்களைக் கடந்த காதலை வரலாற்றின் பக்கங்களில் இருந்து திரைக்குக் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர். மராத்திய எழுத்தாளர் நாக்நாத் எஸ். இனம்தார் எழுதிய 'ராவ்' என்ற நாவலைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக, காதலை மட்டுமே கொண்டாடும் பன்சாலி, இந்தப் படத்தில் மத அரசியலையும் சற்றுத் துணிச்சலுடன் கையாண்டிருக்கிறார்.

பேஷ்வா பாஜிராவ் (ரன்வீர்), சத்திரபதி ஷாஹுவின் (மகேஷ் மஞ்ரேகர்) மராத்திய ராஜ்ஜியத்தை விரிவாக்குவதில் தீவிரமாக இருக்கிறார். அப்போது. புந்தேல்கண்டை எதிரியிடமிருந்து காப்பாற்ற உதவி கேட்கிறார் 'பாதி-இஸ்லாமிய' இளவரசி மஸ்தானி. அந்தக் கோரிக்கையை ஏற்று பாஜிராவ் புந்தேல்கண்டைக் காப்பாற்றுகிறார். பாஜிராவ்-மஸ்தானி இருவரும் காதல் வயப்படுகின்றனர். தவிர்க்கவே முடியாத ஈர்ப்பாக அவர்கள் இருவரையும் விழுங்கும் இந்தக் இந்தக் காதலை பாஜிராவின் மனைவி காஷிபாய் (பிரியங்கா) எப்படி எடுத்துக்கொள்கிறார்? அன்பான மனைவிக்கும் ஆசைக் காதலிக்கும் இடையேயான ஊசலாட்டத்தை பாஜிராவ் எவ்வாறு கையாள்கிறார்? பிறப்பால் பிராமணரும் இந்து சாம்ராஜ்யத்தை இந்தியாவெங்கும் விரிவுபடுத்தும் கனவைச் சுமந்துகொண்டிருக்கும் போர் வீரருமான பாஜிராவின் லட்சியப் பயணத்தில் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது? ஜாதி, மதத்தின் பிடியில் இருக்கும் சாம்ராஜ்ய அரசியல் இந்தக் காதலை எப்படி எதிர்கொள்கிறது?

அடிப்படையில் பாஜிராவ், மஸ்தானி, காஷிபாய் மூவருக்கும் இடையில் நடக்கும் உணர்ச்சிப் போராட்டம்தான் இந்தப் படம். இதன் நடுவே தர்பார்களும் போர்களும் வந்துபோகின்றன. பாஜிராவ் அதிகாரத்தின் மையத்தில் இருப்பவர் என்பதால் இதை அவரது தனிப்பட்ட விஷயம் என்று விட அதிகாரம் தயாராக இல்லை. காதலினூடே இதையும் வலுவாகக் கையாள்கிறார் பன்சாலி. காதல் கதையில் மத அரசியலைத் தீவிரமான காட்சிகளில் வெளிப்படுத்தியதற்காக நிச்சயம் அவரைப் பாராட்டலாம். மஸ்தானியின் மகனுக்கு இந்து மதப் பெயர் வைக்கக் கூடாது என்று வைதீகர்கள் சொல்லும் காட்சியை இதற்கு ஓர் உதாரணமாகச் சொல்லலாம். பாஜிராவ் அதைக் கையாளும் விதத்தில் அந்தப் பாத்திரத்துக்கே உரிய கம்பீரமும் நேர்மையும் பிரதிபலிக்கின்றன. இந்த மூவரில் யார் பக்கமும் பார்வையாளர்கள் முழுமையாகச் சாய்ந்துவிட முடியாத வகையில் ஒவ்வொரு பாத்திரமும் அதற்கான நியாயங்களுடன் வார்க்கப்பட்டிருக்கிறது.

சுதீப் சாட்டர்ஜியின் ஒளிப்பதிவும், சஞ்சித் பல்ஹாராவின் பின்னணி இசையும், அஞ்சு மோடியின் ஆடை வடிவமைப்பும் படத்துக்கு மேலும் பிரம்மாண்டத்தைக் கூட்டியிருக்கின்றன. போர்க் காட்சிகளும் கண்ணாடி அறைப் பாடல் காட்சியும் கண்ணில் நிற்கின்றன.

எந்தக் காலகட்டத்திலும் அன்புக்கு மதம் தேவையில்லை என்பதை 'பாஜிராவ் மஸ்தானி' மூலம் சரியான நேரத்தில் வலுவாகச் சொல்லியிருக்கிறார் சஞ்ஜய் லீலா பன்சாலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x