Published : 18 Dec 2018 04:45 PM
Last Updated : 18 Dec 2018 04:45 PM

நம்மை அசைத்துப் பார்க்கும் அக்கமான பாக்யா!

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் டிசம்பர் 16-ம் தேதி ரஷிய கலாச்சார மையத்தில் காலை 10:00 மணிக்கு திரையிடப்பட்ட படத்தின் விமர்சனம்.

கர்நாடக மாநிலத்தின் கிராமப்புறத்தில் வாழும் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையை அதிரடிக் காட்சிகளையோ, திடிக்கிடும் திருப்புமுனைகளையோ கொண்டிராமல் மக்களின் இயல்பான வாழ்க்கையையும், அவர்களின் இயலாமையையும், வலியையும் அம்மண்ணிலிருந்து நமக்காக அழகு சொட்டச் சொட்ட காட்சிப்படுத்தியுள்ளது அக்கமான பாக்யா.

கன்னட எழுத்தாளர் டி.ஆர்.சுப்பாராவின் நாவல் 'அக்கமான பாக்யா'வை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கிராமப்புற வாழ்கைச்சூழலை அதிலிருக்கும் சின்னச்சின்ன நுணுக்கமான நடைமுறை பழக்கவழக்கங்களை மிகுந்த நிதானத்துடன் அழகுணர்ச்சியுடன் படமாக்கியுள்ளது. உழைக்கும் மக்களின் உயர்ந்த கலாச்சாரம், அவர்கள் வாழ்கையை அணுகும் விதம் ஆகியவற்றை சுதந்திரத்திற்கு முற்பட்ட பிரிட்டிஷ் காலப் பின்னணியில் சொல்கிறது இத்திரைப்படம்.

பிராமண குடும்பத்தைச் சேர்ந்த சென்னிங்கா அதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் ஒரு விவசாயக் கூலியாகவே வாழ்கிறான். அவன் தந்தை இறக்கும் முன் கூறும் அறிவுரையில் 'நம் பிராமணக் கடமை என்பது ஊருக்கு உழைப்பதுதான். யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் ஊருக்கு உழைத்தால் ஊர் நம்மை பார்த்துக்கொள்ளும்' என்று சொல்கிறார்.

தந்தையின் வாக்குப்படி சென்னிங்கா ஊரில் உள்ள எல்லோர் வீட்டிலும் வேலை செய்கிறான். ஊரும் அவன் மேல் மிகுந்த அக்கறையோடு கவனித்துக்கொள்கிறது. இப்படியான அவன் வாழ்க்கையில் அக்கமாவுடன் திருமணம் நடக்கிறது.

அக்கமாவின் வருகை அதன் பின் அவளின் தன்மைகளுக்கும் சென்னின்காவின் தன்மைகளுக்கும் இருக்கும் மாறுபாடுகள். அவர்கள் வாழ்கையில் ஏற்படும் எதிர்பாரா இழப்பு, பின் அக்கமா அதனை எதிகொள்ளும் விதம் என்று கதை விரிந்து செல்கின்றது. கதையில் காட்டப்படும் பெரும்பாலான கதாப்பாத்திரங்கள் மனிதர்களுக்குள்ளிருக்கும் நல்ல தன்மைகளை ஒளியை நிலைநிறுத்துகிறார்கள்.

ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகத்தில்' உள்ள அந்த ஒரு கிராமத்தை போன்றது சென்னின்காவின் கிராமம். அக்கமா எதிர்கொள்ளும் பிரச்னைகள் கூட, அவள் அந்த கிராமத்தை விட்டு வேறிடத்திற்கு செல்லும்போதே ஏற்படுகிறது. ஏனனில் அந்த கிராமத்தில் உள்ள எல்லோரும் ஒருவர் மீது ஒருவர் அன்பாக ஆதரவாக ஒரு குடும்பம் போல இருக்கிறார்கள். அது கிராமங்களை பற்றிய சிதைந்துபோன நம் ஆழ்மன வர்ணனைகளின் உயிரோட்டத் திரட்சியாகவே இப்படத்தில் அமைந்துள்ளது.

வயல் வேலை, களை அறுப்புக்குப்பின் வண்டியேற்றம், கன்னிகாதான சம்பிரதாயம், குழந்தைக்கு சாம்பிராணி காட்டுவது, சுத்திப் போடுவது, படி அளந்து இறைப்பது, புளி பறிப்பது, அம்மியில் ஊறுகாய் அரைப்பது, நெசவு செய்வது, மண் வெட்டுவது என கிராம வாழ்வியல்களை பொதுவான பாணியில் சொல்லாமல், ஒவ்வொன்றுக்கும் நேரம் ஒதுக்கி ஒளியோடு நமக்கு காட்டியிருக்கும் விதமும் பின்னிசையாக புல்லாங்குழலின் கீதத்தோடு அங்கங்கே இவற்றின் ஊடாக வெளிப்படும் கிராமியப் பாடல்கள் நம்மை இலகுவாக்குவது மட்டுமல்லாமல் அந்த கிராமத்துக்கு நம்மை கடத்தியும் சென்றுவிடுகிறது.

பிராமணக் குடும்பத்தில் இருக்கும் விவசாயக் கூலியின் குடும்பம், பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் கிராமங்களில் சாதிய, நிலவுடைமைக்கான இயல்புகள், சுதந்திரத்திற்கான கோஷம் என்று ஒரு புறம் இருந்தாலும் அக்கம்மா தன் வாழ்க்கை தனக்கேற்படுத்தும் நிச்சயமற்ற ஊசாலாடும் தன்மையில் சுதந்திரப்போராட்ட கோஷங்கள் எழுப்புவோரை எதோ விநோதமாக ஊர்வலம் போகும் குழு ஒன்றினைப் பார்ப்பது போல பார்ப்பது என்று தேர்ந்தெடுத்த அம்சங்கள் நம்முள் இருக்கும் பிரிட்டிஷ் இந்தியா பற்றிய சித்திரத்தை சற்று பலமாகவே அசைக்கிறது அக்கமான பாக்யா.

- இனியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x