Published : 12 Dec 2013 05:49 PM
Last Updated : 12 Dec 2013 05:49 PM
11-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், டிசம்பர் 13-ம் தேதி திரையிடப்படும் படங்களுக்கான கதைச் சுருக்கம்.
தேதி : 13 DEC 2013
திரையரங்கம் : WOODLANDS
நேரம் : 11.00 am
90 Minutes
ஒரு இயக்குநர் என்பவர் படம் எடுப்பார். அவரையே ஒருவர் படம் எடுத்தால்? அதுவும் அவர் ஒரு பெண்ணுடன் படுக்கை உறவில் இருக்கும் போது? உறவாடிய பெண்தான் அப்படி படம் எடுத்தவள். 'உன் பணக்கார மனைவிக்கு படத்தை போட்டுக் காட்டி விடுவேன்' என்று அவள் அவனை மிரட்ட.. உங்களை நிஜமாகவே இருக்கை நுனிக்கு நகர்த்தும் கொரிய நாட்டு திரில்லர் படம்.
நேரம் : 2.00 pm
Jo's Neighborhood
15 வருடங்கள் ஜெயிலில் இருந்துவிட்டு தன் சொந்த ஊருக்குத் திரும்புகிறான் ஜோ. ஊரா அது?. 15 வருடத்தில் தலைகீழாக மாறியிருக்கிறது. அவனுடைய அந்நாள் காதலி இன்று இன்னொருவன் மனைவி. அவளுக்கு 14 வயதில் ஒரு பையன். ஊரில் மாஃபியா கும்பலின் அட்டகாசம் வேறு. ஊரில் ஜோவால் வாழ முடியாத நிலை. அதற்காக ஊரை விட்டு போகவும் மனமில்லை. வாழ்வா? சாவா? கொலைகார எதிரிகளுடன் கொள்கை யுத்தத்தை துவங்குகிறான் ஜோ. ஆலியன் மினியர் இயக்கிய பிரெஞ்சு படம்.
நேரம் : 4.00 pm
The Whirlpool
உலகெங்கும் இந்த வருடம் வெளியான சிறந்த படங்களில் ஒன்றாக மதிக்கப்படும் இது 'இதய பலம் இல்லாதவர்கள் இதைப் பார்க்க வேண்டாம்' என்று துவங்குகிறது. அவ்வளவு பயங்கரமான திரில்லர் படமல்ல இது. யுத்தம் பற்றிய படம். போரின் கோர முகம்.. அது ஏற்படுத்தும் வன்முறை.. சீரழிவு இவற்றை மூன்று நண்பர்களின் வாழ்வின் ஊடாகப் படம் பேசிப் போகிறது. இயக்கம் போஜன் வக் கொசோவெஸ்கி.
நேரம் : 7.00 pm
Salvo
சால்வோ கூலிக்கு கொலை செய்பவன். அன்று எவனைக் கொல்ல வேண்டுமோ அவனுக்கு ஒரு தங்கை. பாவம் பார்வையற்றவள். கொடுக்கப்பட்ட வேலைக்காக அண்ணனைக் கொன்று விட, அதன் பிறகு தங்கை என்ன ஆனாள்?. கொலைகாரன் அவளை என்ன செய்தான்?. விறுவிறுப்பாக நகரும் இத்தாலிய மொழிப் படம். இயக்குனர்கள் இருவர் : Fabio Grassadonia, Antonio Piazza.
* * * * * * * * * * * * * * * * * * *
திரையரங்கம் : WOODLANDS SYMPHONY
நேரம் : 10.45 am
L’INTRUS
லூயிஸ், வயது 70. வீட்டில் துணையாக சில நாய்களைத் தவிர வேறு ஒருவரும் இல்லை. அவருக்கு திடீரென இதயக் கோளாறு. மாற்று இதயம் பொருத்தியே ஆக வேண்டும். கள்ள மார்க்கெட்டில் இதயம் தேடுகிறார் லூயிஸ். கூடவே தன்னோடு சண்டை போட்டு பிரிந்து சென்ற தன் மகனையும். ழான் லுக் நான்சி எனும் பிரெஞ்சு தத்துவ அறிஞரின் சொந்த வாழ்வே படத்தின் கதைக்களன்.
நேரம் : 1:45 pm
WHEN DAY BREAKS
செர்பியாவின் Goran Paskaljevic இயக்கி, கடந்த ஆண்டு வெளியான படம். மிசா ஓய்வு பெற்ற இசை ஆசிரியர். வீட்டில் புதையுண்டு இருந்த இரும்புப் பெட்டி ஒன்று ஒருநாள் மிசாவுக்கு கிடைக்க.. அவரின் பெற்றோர் பற்றிய பல உண்மைகள் அவருக்கு தெரிய வருகிறது. அவர்கள் ஹிட்லரின் நாஜி சித்திரவதைக் கூடத்தில் சித்திரவதை அனுபவித்து உயிர் விட்டவர்கள். மிசாவின் அப்பாவும் ஓர் இசைக் கலைஞர். WHEN DAY BREAKS அவரால் முடிக்க முடியாமல் பாதியிலேயே நின்று போன இசைக் கோர்வை. தன் அப்பாவுக்கு அஞ்சலியாக மிசா அதை முடிக்க முனைகிறார். ஹாலோகாஸ்டின் போது செர்பியாவில் நாஜிகளால் கொல்லப்பட்ட யூதர்கள், நாடோடிகள் மற்றும் அரசியல் கைதிகள் பற்றிய அழுத்தமான பதிவு.
நேரம் : 4:15 pm
Oh Boy!
காலையில் எழும் போது கட்டிலில் இடித்துக் கொள்கிறீர்கள். சுண்டு விரலில் இருந்து லேசாக ரத்தம் வருகிறது ' சே.. இந்த நாள் மிகவும் மோசமாக அமையப்போகிறது' என்று சலித்துச் கொள்ள.. அந்த நாளும் அதே போல் மோசமாக அமைகிறது. இப்படி நம்மில் பலருக்கும் நடந்திருக்கலாம். அப்படி ஒருவனின் ஒரு நாளைப் பற்றிய படம். நீகோவுக்கு ஏழரை நாட்டுச் சனி அதன் உச்சபட்ச அழிச்சாட்டியமாய் அன்று அவனைப் படுத்தி எடுக்கிறது. அந்த ஒரு நாளில்.. அவன் சட்டக் கல்லூரியில் இருந்து தூக்கப்படுகிறான், குடித்துவிட்டு கார் ஓட்டியதற்காக அரெஸ்ட் ஆகிறான், ரயிலில் டிக்கெட்டை தொலைத்து ஃபைன் கட்டுகிறான், நண்பனின் வீட்டுக்குப் போனால் அவன் மனைவி பற்றிய புலம்பல் கழுத்தறுப்பு.. இப்படி ஒரே நாளில் அவன் முழு ஜென்மத்தின் துயரமும் அவனைத் துரத்துகிறது. Jan Ole Gerster எனும் ஜெர்மன் திரைப்படக் கல்லூரி மாணவர் தனது கல்லூரித் தேர்வுக்காக எடுத்த படம்.
நேரம் : 6:45 pm
Mystery Road
ஒரு கொலை குறித்த விசாரணைப் படம். ஜே சுவான் ஒரு டிடெக்டிவ். இட மாறுதலில் சொந்த ஊருக்கு வருகிறான், வந்த இடத்தில் முதல் கேஸ் - ஒரு இளம் பெண் கொலை, அதன் பின்னணியில் ஒரு பெரிய ஆள். ஊர் மக்களா.. சாப்பிடுவதற்கும் வாயைத் திறக்கக் கூட பயப்படுகிறார்கள். கொலைகாரன் யார்? டிடெக்டிவ் அவனைப் பிடித்தாரா?. ஐவன் சென் எனும் ஆஸ்த்ரேலிய இயக்குனரின் படம்.
* * * * * * * * * * * * * * * * * * *
திரையரங்கம் : SWARNA SAKTHI ABIRAAMI
நேரம் : 11:00 am
A Long and Happy Life
ரஷ்யாவின் சிறிய கிராமம் ஒன்றில் வசிப்பவன் சாஷ்சா. அவனுக்கு சொந்தமாக கொஞ்சம் நிலம்.. கொஞ்ச சொந்தமாக ஒரு காதலி. இப்படி மிக எளிமையாகக் கழிகிற அவன் வாழ்க்கையில் திடீரென புயல். அரசாங்கம் அவன் நிலத்தைப் பறித்துக் கொள்கிறது. சாஷ்சாவுக்கு விவசாயம் தவிர வேறு தொழில் தெரியாது. 'வேறெங்காவது போ.. கூலி வேலை செய்' என்று விரட்டுகிறது அரசு. சாஷ்சா தன் நிலத்தை மீட்பதென முடிவெடுக்கிறான். அரசாங்கத்தை எதிர்த்து ஒற்றை மனிதனின் போராட்டம். ரஷ்ய சினிமாவில் அன்று புடவ்கின், ஐசன்ஸ்டீன் காலத்தில் கம்யூனிச ஆதரவு பிரச்சாரம். இன்று அதே சினிமாவில் கம்யூனிச எதிர்ப்பு.
நேரம் : 2:00 pm
Trapped
நசாரின்- படிக்க வந்த இடத்தில் வாடகைக்கு வீடு தேடுகிறாள். வீடும் கிடைக்கிறது. சற்றே பெரிய வீடு. கூட இன்னொருவர் தங்கலாம். வாடகைச் சுமையும் குறையும். அந்த இன்னொருத்தியும் வந்து சேர்கிறாள். அவள் சாஹர். ஒரு பூக்கடையில் வேலை பார்ப்பவள். கொஞ்ச நாளில் சாஹர் நெருங்கிய தோழியாகிவிடுகிறாள். திடீரென ஒரு நாள் சாஹரைக் காணோம். நசாரின் அவளைத் தேடி அலைகிறாள். வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காததால், ஒரு ஈட்டிக்காரன் அவளை ஒரு அறையில் அடைத்து வைத்திருக்கிறான். நசாரின் சாஹரை எப்படி மீட்டாள் என்பதே கதை. பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டிக்கிற படம். ஈரான் நாட்டின் பர்வீஸ் ஷபாசி இயக்கியது.
நேரம் : 4:30 pm
The Circle Within
சந்தேகம் சகஜமான ஒன்று. எல்லோருக்கும் அது வரும். ஆனால் அளவு அதிகரித்தால், அதுவே பெரிய நோய் . இந்த நோய் ஒரு சமூகத்தை.. ஒரு இனத்தையே பீடித்தால்?
ஒத்தெல்லோவின் சந்தேகத்தால் டெஸ்டிமோனா செத்தாள். இது சந்தேகத்தால் ஒரு இனமே அழிந்து போன உண்மைக் கதை. டென்னிஸ் குவினார் இயக்கிய துருக்கி நாட்டுத் திரைப்படம்.
நேரம் : 7:00pm
Young & Beautiful
Francois Ozon என்கிற பிரெஞ்சு இயக்குனரின் படம். இசபெல் என்கிற பெண்ணுக்கு கட்டுக்கடங்காத பாலியல் வேட்கை. அதற்காகவே வேசி ஆகிறாள். இது வீட்டுக்குத் தெரியாது. ஒரு நாள் அவளிடம் வாடிக்கையாளனாக வந்த ஜார்ஜ் இறந்து விட.. இசபெல் அதிர்ச்சி அடைந்து வீட்டுக்கு ஓடி வந்து விடுகிறாள். தடயங்களை வைத்து போலிஸ் அவளைத் தேடுகிறது. போலிஸ் அவளைப் பிடித்ததா? அவள் விஷயம் வீட்டுக்கு தெரிந்ததா?
* * * * * * * * * * * * * * * * * * * *
திரையரங்கம் : ROBOT BALA ABIRAMI
நேரம் : 10.45 am
Fynbos
மெரிலும் ரிச்சர்டும் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்கள். ஆனால்.. அது ஒரு கனாக் காலம். கல்யாணத்துக்குப் பின் ரிச்சர்ட் ரியல் எஸ்டேட் தொழிலில் கோடிகளைத் துரத்த ஆரம்பித்து விட்டான். ரிச்சர்டுக்கு இப்போது ஒரு பெரிய ஆஃபர். கொஹேல்பெர்கில் உள்ள ஃபின்போஸ் மாளிகையை விற்றுத் தர வேண்டும். ஃபின்போஸ் ஒரு அழகான கண்ணாடி மாளிகை. சுலபத்தில் வேலை முடிந்துவிடும் என்கிற ரிச்சர்டின் எண்ணத்தில் மண். இழுத்தடிகிறது வியாபாரம். ஏனென்றால் கண்ணாடி மாளிகைக்குள் ஒரு மர்மம். அது என்ன மர்மம்? தியேட்டரில் தெரியும்.
நேரம் : 1.45 pm
How to Describe a Cloud
லிலிங் ஒரு இளம் பெண்.. தைபெயில் வாழும் ஓர் இசைக் கலைஞர். திடீரென்று ஒரு நாள் அவளது தாய்க்கு பார்வை பறிபோகிறது. மருத்துவர்கள் மெல்ல மெல்ல அவளுக்கு நினைவுகளும் மங்கி மறந்துவிடும் என்கிறார்கள். லிலிங் இப்போது தன் தாய்க்கு கண்ணுக்கு கண்ணாக இருக்க முடிவெடுக்கிறாள். பார்க்கிற காட்சிகளையெல்லாம் அவளுக்கு விளக்கிச் சொல்கிறாள். அமிலி படத்தில் நாயகி ஒரு பார்வையற்றவனுக்கு ஒரு தெருவின் நிகழ்வுகளை விவரித்தபடியே செல்வாள். அந்த கணம் அவனுக்கு கண் இருப்பது போலவே அவன் உணர்வான். நம்மூர் கஜினியிலும் இந்த சீன வரும். அந்த ஒரு காட்சியின் சிலிர்ப்பும் பரவசமும் இந்த ஒட்டுமொத்தப் படம் முழுவதும்.
நேரம் : 4.15 pm
The Major
மனைவி டெலிவரிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள். அவளைக் காண ஆர்வம் ப்ளஸ் பரபரப்புடன் கார் ஓட்டி வருகிறான் கணவன். கவனக் குறைவால் ஒரு விபத்து. கார் ஒரு சிறுவன் மீது மோதி அவன் இறந்து விடுகிறான். இப்போது கணவனுக்கு இரண்டே வழிகள். ஒன்று அவன் ஜெயிலுக்கு போகவேண்டும், இல்லை குற்றத்தை மறைக்க வேண்டும். இதில் கவனிக்க வேண்டியது. அந்த கணவன் ஒரு போலீஸ் அதிகாரி. குற்றம் உங்கள் வாழ்க்கையையும், உங்களைச் சார்ந்தவர்களின் வாழ்க்கையையும் பாதிக்கும் போது குற்றத்தின் நிறம் என்ன? ரஷ்யாவின் யூரி பைகோவ் இயக்கிய படம்.
நேரம் : 6.45 pm
The Bag of Flour
கதிஜா லேக்ரேயே என்கிற இயக்குனரின் முதல் படம். பெல்ஜியத்தில் நடந்த உண்மைச் சம்பவம் தான் கதை. சாரா, 8 வயது சிறுமி, மொரோக்கோ மலைப்பகுதியில் உள்ள கத்தோலிக்க ஆசிரமத்தில் வளர்பவள். கன்னியாஸ்திரிகளின் கண்டிப்பால் ரொம்பவே நொந்து போகிறாள். 'எனக்கு மட்டும் ஏன் அம்மா, அப்பா இல்லை?' எனபதே கடவுளிடம் அந்தச் சிறுமியின் கேள்வி. 'நான்தான் உன் அப்பா' என்று ஒரு மனிதன் வருகிறான். சாராவுக்கு அது மகிழ்ச்சியின் உச்சம். உடனே அவனுடன் கிளம்பி விடுகிறாள். ஒரு பஸ் பிரயாணத்தில் அவன் தோளில் சாய்ந்து தூங்கியும் விடுகிறாள். கண் விழித்துப் பார்த்தால் அந்த அப்பாவைக் காணோம். இடம்.. சூழல்.. எல்லாமே புதுசு. சாரா இனி எங்கு போவாள்? என்ன செய்வாள்?. மிக உருக்கமான படம்.
* * * * * * * * * * * * * * * * * * * * *
திரையரங்கம் : INOX 2
நேரம் : 10.45 am
Mother, I Love you
'அம்மாவின் பொய்கள்'- ஞானக்கூத்தனின் அலுக்காத ஒரு கவிதை. அதுபோல் அம்மாவிடம் நாம் சொல்லும் பொய்களும் சுவாரஸ்யமானவை. செய்த சிறுசிறு தவறுகளை மறைக்க அம்மாவிடம் ஆயிரம் பொய்கள் சொல்வோம். சிறுவயதில் அம்மா நமக்கு ஹிட்லர். ரேமண்ட் என்கிற சிறுவனுக்கும் அப்படித்தான். அவனுக்கு ஒரு கெட்ட பழக்கம். விளையாட்டாய் திருடும் குணம். அப்படி ஒரு நாள் திருடுபவன் அம்மாவிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க செய்யும் தந்திரங்களும் சொல்லும் பொய்களுமே படம். ரேமண்டின் கலாட்டாவுக்காக பார்க்கலாம்.
நேரம் : 4:15 pm
LOVE ME
செமால் ஒரு மிடில் கிளாஸ் இளைஞன். அவனுக்கு ஒரே ஒரு கொள்கை : செய்தால் காதல் திருமணம்தான். அப்படிப்பட்டவனுக்கு வீட்டில் பெண் பார்த்து நிச்சயமும் முடிந்து விடுகிறது. பெண்ணின் முகத்தை பார்க்கக்கூட வழி இல்லை. 'இந்த உலக மகா சோகத்தை மறக்க, வா.. உக்ரைனில் ஒரு வாரம் குடித்து கழித்து விட்டு வருவோம்' என்று நண்பர்கள் அவனை அழைத்துச் செல்கின்றனர். அந்த உக்ரைனில் ஒருத்தி. பெயர் சாஸ்சா. காதலன் அவளை ஏமாற்றி விட்டான். அந்தக் கடுப்பில் இன்னொருவனிடம் பிள்ளை பெற்றுக்கொள்ளும் முடிவில் இருக்கிறாள். செமால்-சாஸ்சா காவிய சந்திப்பு நிகழ்கிறது. வழக்கமான கதை. வழக்கமில்லாத கிளைமாக்ஸ்.
நேரம் : 6:45 pm
Lincoln
லிங்கனை உலகத்துக்கே தெரியும். 'லிங்கன்' சினிமாவும் கிட்டத்தட்ட அப்படித்தான். சென்ற ஆண்டு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கி இரண்டு ஆஸ்கர் விருது பெற்ற படம். அமெரிக்காவின் உள்நாட்டுப் போரின் போது அவரின் சாமர்த்தியத்தையும், அமெரிக்காவின் விதியை மாற்றிய அவரது சில முடிவுகளையும் பற்றிய படம். இந்த படத்தில் லிங்கனாக நடித்திருப்பவர் பிரபல நடிகர் Daniel Day-Lewis.
* * * * * * * * * * * * * * * * * * * *
திரையரங்கம் : INOX 3
நேரம் : 11:00 pm
Black Diamonds
கனவுகள் இல்லாத மனிதர்கள் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு. ஆனால் கடைசி வரை அந்த கனவைத் துரத்திக் கொண்டு செல்பவர்கள் ஒரு சிலரே. மாலியைச் சேர்ந்த அமாடோ மற்றும் மூஸாவுக்கு கால்பந்தாட்டம்தான் கனவு. கால்பந்து விளையாட்டில் சாதிக்க வேண்டும். ஆனால், வீட்டில் பிடுங்கித் தின்கிற வறுமை. வேலைக்குப் போனால்தான் அடுத்த வேளைச் சோறு. கால்பந்து ஆடப்போனால்.. அரை வயிறும் நிரம்பாது. ஆனால் நண்பர்கள் விடுவதாக இல்லை, ஐரோப்பாவுக்கு போய்ச் சேர்கின்றனர். அங்கே கனவு அவர்களைத் துரத்தியதா? அவர்கள் கனவைத் துரத்தினார்களா?
நேரம் : 2:00 pm
Strangers in the House
பால்ய வயதில் துள்ளித் திரிந்த வீட்டைக் கடந்து செல்லும் போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? உடனே உங்கள் மனைவியிடமோ அல்லது குழந்தைகளிடமோ அந்த வீடு பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்வீர்கள்தானே? 70 வயது பெண்மணிஅகபிக்கும் தான் வாழ்ந்த வீட்டைப் பற்றிச் சொல்ல பல கதைகள் உள்ளன. ஆனால் அந்த வீட்டுக்கு சொந்தக்காரி இப்போது வேறு ஒருத்தி. அவள் வேறு யாரும் அல்ல.. சொந்தப் பேத்தி எல்பிடா. எவ்வளவோ கேட்டும் எல்பிடா கிழவிக்கு அந்த வீட்டைத் தர மறுக்கிறாள். அவளுக்கு அதை இடித்து ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும். அந்த வீடு என்ன ஆனது?. பாட்டி-பேத்தி இருவரில் வீட்டை விட்டுக் கொடுத்தது யார்?. உணர்ச்சிமிகு குடும்பக் காவியம்.
நேரம் : 4:30 pm
Don Jon
டான் ஜுவான் பல பெண்களை மயக்கும் பெண்பித்தர். இது ஒரு ஸ்பானிய புனைவு கதாபாத்திரம். இந்த டான் ஜூவான் மொசார்ட் முதல் பெர்னார்ட் ஷா வரை பாதித்திருக்கிறான். எல்லோரும் அவனைத் தழுவியிருக்கிறார்கள். அந்த டான் ஜுவானின் கலியுக அவதாரமே இந்த டான் ஜான்.
ஜான் அமெரிக்காவின் மன்மதன். அதனாலேயே அவனை டான் ஜான் என்று அவனது நண்பர்கள் செல்லமாக அழைக்கின்றனர். டான் ஜானுக்கு காதல் என்பது வெறும் ஒரு சொல்.. அவ்வளவுதான். அப்படிப்பட்டவனும் ஒரு பெண்ணுக்காக கடைசியில் மாய்ந்து மாய்ந்து உருகினான். காதல் என்கிற வார்த்தையின் முழு அர்த்தத்தை உணர்ந்து கொண்டான். பிரபல ஹாலிவுட் நடிகர் ஜோசப் கார்டன் லெவி இயக்கிய முதல் படம்.
* * * * * * * * * * * * * * * * * * * *
திரையரங்கம் : CASINO
நேரம் : 11:00 am
Something In The Way
சிவப்பு விளக்குப் பகுதி கதை. அங்கு வரும்.. போகும்.. மனிதர்களின் உணர்வுகளை கிளுகிளுப்பாக மட்டும் அல்லாமல் சமூக அக்கறையுடனும், மனிதநேயக் கண்ணோட்டத்துடனும் விபரிக்கும் படம். செக்ஸின் மீது தீராத விருப்பம் கொண்ட ஒரு டாக்ஸி டிரைவர் சந்திக்கும் மனிதர்கள் வழியாக விரிகிறது காமத்தீயில் பற்றி எரியும் ஒரு இரவு நகரத்தின் கதை.
நேரம் : 2:00 pm
Rock The Casbah
சோபியா ஒரு புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகை. ஊரில் அவள் அப்பா இறந்து விடுகிறார். உடனே ஊருக்கு கிளம்பி வருகிறாள். அவள் அப்பாவுக்கு மொத்தம் நான்கு பெண்கள். அதில் இரண்டு பேருக்கு இவள் மீது ரொம்ப பொறாமை. இன்னொருத்தி சில மாதங்கள் முன்புதான் தற்கொலை செய்து கொண்டாள். அதற்குக் காரணம் சோபியாதான் என்று பொறாமைச் சகோதரிகள் குற்றம் சுமத்துகின்றனர். பொறாமை படுத்தும் பாடு என்று படத்துக்கு பெயர் வைக்கலாம். குடும்ப உறவுகளை அந்த நாட்டுக் கலாச்சார பின்புலத்தில் பேசுகின்ற படம்.
நேரம் : 4:30 pm
The Cleaner
அயல் மொழிப் பிரிவில் இந்த வருட ஆஸ்கருக்கு பெரு நாடு அனுப்பியிருக்கும் படம். யுசெபோ ஒரு ஃபாரன்சிக் கிளீனர். பிணங்கள் விழுந்தால், சென்று அந்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும், அதுதான் அவனுடைய வேலை. திடீரென்று நாட்டில் விஷஜுரம். அதனால் ஊரில் ஏகப்பட்ட சாவுகள். யுசெபோ ஒரு வீட்டில் பிணங்களை அப்புறப்படுத்தும்போது அலமாரியில் ஒளிந்திருக்கும் ஒரு சிறுவனைப் பார்க்கிறான். அவன் பெற்றோர் இறந்துவிட அந்த வீட்டில் அவன்தான் மிச்சம். அந்தக் குடும்பத்தின் மீதி நபர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் சிறுவனை ஒப்படைக்கிறான் யுசெபோ.
நேரம் : 7:00 pm
Pecado Fatal
இது பார்ட்டிகளின் காலம். சந்தோசத்துக்கும் சரி, துக்கத்துக்கும் சரி.. உடனே பார்ட்டிதான். லிலோவும் மிகுவெலும் அப்படி ஒரு பார்ட்டியில் சந்திக்கின்றனர். வழக்கம்போல் இந்த பார்ட்டியிலும் போதை கரை புரண்டு ஓடுகிறது. இருவருக்கும் இரவு இனிமையாக கழிகின்றது. அடுத்த நாள் மிகுவெல் அந்த லிலோவை அடியோடு மறந்துவிட்டு அன்றாட அலுவல்களில் மூழ்கி விடுகிறான். அவனைப் பொருத்தமட்டில் பார்ட்டி மேட்டர் ஒரு சம்பவம். லிலோவுக்கோ அது ஒரு சரித்திரம். லிலோ காதலுடன் முகுவெலை சந்திக்கப் போகிறாள். இதன் பிறகு நடக்கிறது சுவாரசியங்களின் அணிவகுப்பு.
* * * * * * * * * * * * * * * * * * * *
அரங்கம் : RANI SEETHAI HALL
நேரம் : 11:00 am
XL
ஐஸ்லாந்தின் ஹேங்கோவர் ( Hangover ) படம். இளைஞன் லீஃபர் பார்க்க ரொம்ப அமைதி. பெண்களிடம் அதிகமாக வழிவான். சொல்கிற வேலையை ஒழுங்காகச் செய்வான். அவனுடைய ஒரு நாள் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சாதாரணமாக கழிய.. அடுத்த நாள் கதை தலைகீழ் ஆகிறது. ' பொதுமக்கள் முன்னால் சதுக்கத்தில் அவனுக்கு சவுக்கடி, குடிப் பழக்கத்திலிருந்து மீள அவன் ஒரு வருடம் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்.' இதை அறிவிப்பது அந்த நாட்டு பிரதமர். அந்த அளவுவுக்கு லீஃபர் என்ன செய்தான்.. ஹேங்கோவர் போலவே அடல்ட் காமெடி ரசிகர்களுக்கு இந்த படமும் விருந்து.
நேரம் : 7:00 pm
A Simple Life
ஆன் ஹுய் இயக்கிய சீனப் படம். பொதுவாக வயதானவர்களை யாரும் ரசிப்பதில்லை. அவர்களால் மிஞ்சுவது எரிச்சல்தான். "அந்தக் காலத்தில்...." என்று ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டார்கள். பிடிவாதம் ஜாஸ்தி.. இன்னொரு பக்கம் அவர்கள் வளர்ந்த குழந்தைகள். யாருக்கும் அவர்கள் மேல் நல்லஅபிப்ராயம் கிடையாது. இந்தப் படம் ஒரு வேலைக்காரிக்கும் அவள் எஜமானனுக்கும் இடையே உள்ள உறவைப் பேசுகிறது. வேலைக்காரி வயதானவள் தொண்டு கிழம். எஜமானன் இளைஞன். இப்படம் சீனாவின் மிக முக்கிய படத்தயாரிப்பாளர் ரோஜர் லீயின் வாழ்க்கை அனுபவம். வேலைக்கார கிழவி வேறு யாரும் அல்ல அவர் வீட்டில் நான்கு தலைமுறைகளாக வேலை பார்ப்பவள். முதுமையை முதுகில் சுமந்திருப்பவருக்கும், நாளையின் நம்பிக்கையை நெஞ்சில் சுமப்பவனுக்கும் இடையே நடக்கும் கதை இது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT