மகாபாரத பட பணி ஆகஸ்ட்டில் தொடங்கும்: நடிகர் ஆமிர்கான்
பிரபல இந்தி நடிகர் ஆமிர்கான், மகாபாரதத்தைப் படமாக எடுக்க இருப்பதாக சில வருடங்களாகக் கூறி வருகிறார். அது ஒவ்வொரு வருடமும் தள்ளிக் கொண்டே போனது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் மகாபாரதத்தைப் படமாக்க இருப்பதாகக் கூறியுள்ளார்.
“மகாபாரதத்தைத் திரைப்படமாக்குவது என் கனவு. அது வெறும் திரைப்படம் அல்ல, ஒரு யாகம்” என ஏற்கெனவே தெரிவித்திருந்த ஆமிர்கான், முதலில் வெப் தொடராக இயக்கி கிருஷ்ணர் அல்லது அர்ஜுனன் வேடத்தில் நடிக்க ஆசை இருப்பதாகக் கூறியிருந்தார்.
இப்போது திரைப்படமாக எடுக்க இருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, “ஆகஸ்ட் மாதம் மகாபாரதத்துக்கான பணிகளைத் தொடங்குகிறேன். இது பிரம்மாண்டமான திரைஅனுபவமாக இருக்கும். ஆனால், இக்கதையை ஒரு படத்துக்குள் அடக்கிவிட முடியாது.
அதனால் தொடர்ச்சியான படங்களாக எடுக்க இருக்கிறேன். எனக்கு, கதாபாத்திரங்கள் தான் நட்சத்திரங்கள். அதனால் தெரியாத முகங்களை, புதிய நடிகர்களை நடிக்க வைக்க இருக்கிறேன்” என்று ஆமிர்கான் தெரிவித்துள்ளார்.
