

பிரபல இந்தி நடிகை கிருத்தி கர்பந்தா. இவர் தமிழில் ஜி.வி.பிரகாஷின் ‘புரூஸ் லீ’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ள அவர், தனது பெயரில் போலி வாட்ஸ் அப் கணக்கு தொடங்கி மர்மநபர் மோசடி செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அதன் ‘ஸ்கிரீன் ஷாட்’டை வெளியிட்டுள்ள அவர், அந்த எண் தன்னுடையது அல்ல என்றும் ரசிகர்களிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”என்னைப் போல ஆள்மாறாட்டம் செய்து மோசடி நடந்து வருகிறது. இது அடையாளத் திருட்டு. இந்த எண்ணிலிருந்து வரும் எந்த அழைப்புக்கும் பதிலளிக்க வேண்டாம். விழிப்புடன் இருங்கள்” என்று ரசிகர்களுக்கும் தனது பாலோயர்களுக்கும் எச்சரிக்கை செய்துள்ளார்.
திரை பிரபலங்கள் பெயரில் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருகின்றன. இந்த மோசடிக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்ஸ் கோரியுள்ளனர். இதற்கு முன் நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், அதிதி ராவ் ஹைதாரி, சன்னி லியோன் உள்பட சிலருக்கும் இதே போன்ற மோசடி முயற்சி நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.