

லோகேஷ் கனகராஜ் உடன் இணையும் படத்தின் நிலை என்ன என்பதற்கு நடிகர் அமீர்கான் பதிலளித்துள்ளார்.
‘கூலி’ படத்தின் விமர்சனங்களைப் பார்த்து, லோகேஷ் கனகராஜ் உடனான படத்தின் திட்டத்தை அமீர்கான் கைவிட்டு விட்டதாக தகவல் வெளியானது. இது உறுதி செய்யப்படவில்லை. எனினும், அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என்ற செய்தியும் வெளியானது.
இதனிடையே, மும்பையில் விழா ஒன்றில் கலந்துக் கொண்டார் அமீர்கான். அதில் லோகேஷ் கனகராஜ் உடனான படத்தின் நிலை என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அமீர்கான், “லோகேஷ் கனகராஜை விரைவில் சந்திக்க உள்ளேன். கடந்த மாதம் இருவரும் பேசினோம். அவர் மும்பைக்கு வரும்போது கதை விவாதத்தை வைத்துக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து முடிவு செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அமீர்கான் – லோகேஷ் கனகராஜ் இருவரும் இணையும் படம் கைவிடப்படவில்லை என்பது உறுதியாக தெரிகிறது.
தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டிசி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
அதனை முடித்துவிட்டு மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தினை இயக்க முடிவு செய்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என தெரிகிறது.