

பிரபல இந்தி நடிகையான ஊர்வசி ரவுதெலா, தமிழில் ‘லெஜண்ட்’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இவர், தனது பெயர், புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆகியவற்றை அனுமதியின்றி பயன்படுத்துவதாகக் கூறி, லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடுக்க இருப்பதாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவரது குழு, “உரிய அனுமதியின்றி ஊர்வசியின் பெயர், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உங்கள் நிறுவனத்தின் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது. தற்போது ரூ.7,000 கோடியை இழப்பீடாகக் கோருவது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
ஏ.ஐ மூலம், பிரபலங்களின் போலி வீடியோக்கள் உருவாகி வருவதாகவும் வணிக நோக்கங்களுக்காக திரை நட்சத்திரங்களின் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்தி வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ள நிலையில் ஊர்வசி ரவுதெலா இழப்பீடு கோர இருப்பதாகக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.