

‘துரந்தர் 2’ படப்பிடிப்பின்போது ஏற்பட்ட பிரச்சினையால் மும்பை மாநகராட்சி, படத் தயாரிப்பு நிறுவனத்தை தடை செய்ய கோரிக்கை விடுத்துள்ளது.
ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங், சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘துரந்தர்’. இதன் 2-ம் பாகம் மார்ச் 19-ம் தேதி வெளியாகவுள்ளது.
முதல் பாகத்தின் அமோக வெற்றியால், 2-ம் பாகத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ‘துரந்தர் 2’ வெளியாதை முன்னிட்டு பல்வேறு படங்கள் தங்களுடைய வெளியீட்டை மாற்றி அமைத்திருக்கின்றன.
இதனிடையே, ‘துரந்தர் 2’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான பி62 ஸ்டூடியோஸ் பெரும் சிக்கலில் சிக்கியிருக்கிறது. இதன் படப்பிடிப்பின்போது பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக நிரந்தரமாக தடை விதிக்க மாநகராட்சி நிர்வாகம் கோரிக்கை விடுத்திருக்கிறது.
தெற்கு மும்பை பகுதியில் உள்ள கோட்டை ஒன்றில் ‘துரந்தர் 2’ படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. அப்போது அங்கு அனுமதியின்றி பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பட்டாசு வெடிப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாகும். இதற்காக ‘துரந்தர் 2’ படக்குழுவினருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 14-ம் தேதி இரவு படப்பிடிப்பின் போதும் பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது.
அந்தப் பகுதியில் பாதுகாப்பட்ட கட்டிடங்கள் இருப்பதால், தீ சம்பந்தப்பட்ட பொருட்களை அங்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனையும் மீறி படக்குழுவினர் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இந்தப் பிரச்சினைகளை முன்வைத்து பி62 ஸ்டூடியோஸ் நிறுவனத்தை தடை செய்யப்பட்ட நிறுவனமாக அறிவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் படப்பிடிப்புக்கு அனுமதி கோரி இணையவழியாகவே விண்ணப்பிக்க இயலும். ஒருவேளை தடை விதிக்கப்பட்டால் மும்பையில் இனி படப்பிடிப்புக்கான அனுமதி கோரி இந்த நிறுவனத்தால் விண்ணப்பிக்க இயலாது. அதுமட்டுமன்றி, இந்த படப்பிடிப்புக்காக படக்குழுவினரும் பெரும் தொகை அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.