

கல்யாணி பிரியதர்ஷன் பாலிவுட்டில் அறிமுகமாகும் படம், ‘பிரளய்’. இதில் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்கிறார். இது ஜாம்பி வகை கதைக்களத்தில் உருவாகும் த்ரில்லர் திரைப்படம். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தனது குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் ஒரு மனிதனின் உணர்வுப்பூர்வமான போராட்டத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் இப்படத்தைத் தயாரிக்கிறது.
பிரபல இயக்குநர் ஹன்சல் மேத்தாவின் மகனான ஜெய் மேத்தா இயக்குகிறார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த வருடம் குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாட முடியவில்லை என்று கல்யாணி பிரியதர்ஷன் கூறியுள்ளார்.
“இந்த ஓணம் பண்டிகையின்போது மும்பையில் ‘பிரளய்’ படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளேன். அதனால் குடும்பத்துடன் ஓணம் சத்யா சாப்பிடவோ, அழகான வெள்ளை நிறச் சேலையில் படங்கள் எடுக்கவோ, பண்டிகைப் பதிவுகளைப் பகிரவோ முடியவில்லை” என்று பதிவிட்டுள்ளார். நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தமிழில் தற்போது ஜீனி, கார்த்தியின் மார்ஷல் படங்களில் நடித்துள்ளார்.