

பார்வையாளர்களின் கருத்துகளை அறிவதற்காக ‘ராமாயணம்: பாகம் 1’ திரைப்படம் லாஸ் ஏஞ்சல்ஸில் பிரத்யேகமாகத் திரையிடப்பட்டுள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணக் கதை திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
2 பாகமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும் ராவணனாக யாஷும் நடித்துள்ளனர். அனுமனாக சன்னி தியோல், லட்சுமணனாக ரவி துபே என பலர் நடித்திருக்கின்றனர்.
ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை பிரைம் ஃபோகஸ் ஸ்டூடியோஸ் சார்பில் நமித் மல்ஹோத்ராவும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.
இதன் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளிக்கும் 2-வது பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சினிமார்க் பிளேயா விஸ்டா திரையரங்கில் பிரத்யேகமாகத் திரையிடப்பட்டது.
படத்தின் இறுதி வடிவமாக அல்லாமல் ‘ஃபர்ஸ்ட் கட்’ எனப்படும் முதற்கட்டத் தொகுப்பு திரையிடப்பட்டது. இதில் 18 -ல் இருந்து 60 வயது வரையிலான பல்வேறு தரப்பு பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களின் கருத்தை அறியும் வகையில் திரையிடப்பட்ட இந்தப் படத்தின் பிரம்மாண்டம், பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்புகள் மற்றும் கதை சொல்லப்பட்ட விதம் ஆகியவை பாராட்டப்பட்டுள்ளன. அங்குக் கிடைத்த கருத்துகளின் அடிப்படையில், எடிட்டிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் மெருகேற்றப்படும் என்று கூறப்படுகிறது.