

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிக்கும் ‘ராமாயணா’, நவ.5-ல் வெளியாக இருக்கிறது. நிதேஷ் திவாரி இயக்கியுள்ள இப்படத்தில் சூர்ப்பணகையாக நடித்திருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.
தனது கதாபாத்திரம் குறித்து அவர் கூறும்போது, “இந்தப் படம் இந்தியாவை உலகுக்கு முன்னிறுத்தும் முயற்சி. நமது கலாச்சாரத்தை உலகளாவிய பார்வையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கும் வாய்ப்பாக இதைப் பார்க்கிறேன். இதில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட, அதே நேரம் பல பரிமாணங்களைக் கொண்ட ஒரு கதாபாத்திரம் சூர்ப்பணகை. அவளால்தான் போரே தொடங்கியது.
எனவே, இத்தகைய பல பரிமாணங்களைக் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது சுவாரஸ்யமாக இருந்தது. வரலாற்றில் அவர் ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்காக மட்டுமே அறியப்படுகிறார்; ஆனால் அவரது கதையில் இன்னும் பல விஷயங்கள் உள்ளன. ஒரு நடிகையாக, மக்களின் பார்வையை மாற்றும் சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பது மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது” என்று தெரிவித்துள்ளார்.