

நடிகை காஜல் அகர்வால்
காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே நடித்துள்ள திரைப்படம், ‘தி இந்தியா ஸ்டோரி’. சேட்டன் டிகே இயக்கியுள்ளார். சாகர் பி ஷிண்டே எழுதித் தயாரித்துள்ளார்.
இந்தியில் உருவாகியுள்ள இப்படம், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகிறது. இதன் டீஸர் மற்றும் விளம்பரங்களில் இந்திய விவசாயம், பால் உற்பத்தி குறித்து ஆதாரமற்ற, தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி பவேஷ் சோதா என்ற தொழிலதிபர் சார்பில் படக்குழுவுக்கு வழக்கறிஞர் ஹிரண்யா பாண்டே நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பூச்சிக்கொல்லி பயன்பாடு, பால் கலப்படம், கோழி வளர்ப்பு மற்றும் புற்றுநோய் அதிகரிப்பு தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள தகவல்களுக்கு போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை என்றும் இதுபோன்ற காட்சிகள் விவசாயிகள் மற்றும் உணவு உற்பத்தித் துறையின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, “உணவுக் கலப்படத்தால் பாதிக்கப்பட்ட இந்தியக் குடும்பத்தின் கதையைத்தான் இப்படம் பேசுகிறது. அன்றாட வாழ்வில் அனைவரையும் பாதிக்கும் முக்கியமான பிரச்சினையை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்தப் படத்தின் நோக்கம்” என்று இயக்குநர் சேட்டன் டிகே தெரிவித்துள்ளார்.