

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும் ராவணனாக யாஷும் நடித்துள்ளனர். சூர்ப்பணகையாக ரகுப் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.
ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படம் 2 பாகமாக உருவாகிறது. தனது பிரைம் ஃபோகஸ் ஸ்டூடியோஸ் சார்பில் நமித் மல்ஹோத்ரா இதை தயாரித்துள்ளார். நடிகர் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸும் இணைந்து தயாரிக்கிறது.
இதன் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளிக்கும் 2-வது பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி, இந்திய சினிமாவில் அதிகம் பார்க்கப்பட்ட டிரெய்லர் என்கிற சாதனையைப் புரிந்துள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தில் இருந்து ‘ஜெய் ஜெய் ராம்’ என்ற பாடலின் தமிழ் வடிவம் வெளியாகியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் கார்த்திக் நேத்தா எழுதிய இப்பாடலைச் சின்மயி பாடியுள்ளார். இப்பாடல் சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்பாடல் பற்றி, ஏ.ஆர்.ரஹ்மான் கூறும்போது, “ராமரின் நாமத்தை எளிமையாகவும் வலிமையாகவும் மீண்டும் மீண்டும் உச்சரிப்பதுதான் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல்.
பக்தி மாறாமல் கேட்பவர்களுக்கு என்றும் மனதில் ஒலிக்கும் பிரார்த்தனையாகவும் அதே நேரம் அந்த இசையை ஒரு திரைப்பாடலாகவும் கொடுக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். இந்தப் பாடல் ரசிகர்களுக்கு அமைதியையும் ஆன்மிக உணர்வையும் தரும் என்று நம்புகிறேன்” என்றார்.