

மும்பை: 'துரந்தர்' திரைப்படம் குறித்த சர்ச்சைகள் குறித்து நடிகர் மாதவன் பதிலளித்துள்ளார்.
தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் இது குறித்துப் பேசிய மாதவன், "நான் எந்தவொரு அரசியல் கட்சிக்கோ அல்லது அதன் தலைவர்களுக்கோ எதிராகப் பதிவிட்டதில்லை. மக்களால் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சரோ அல்லது பிரதமரோ நல்ல காரியங்களைச் செய்யும்போது அவர்களை ஆதரவளிப்பது நமது கடமையாகும்.
நல்ல விஷயங்களைப் பாராட்டுவதைக் குறை கூறுபவர்களின் எண்ணத்தில்தான் தவறு இருக்கிறதே தவிர, எனது பார்வையில் இல்லை. சமூக வலைதளக் கருத்துகளுக்காக எனது எண்ணங்களை நான் மாற்றிக்கொள்ளப் போவதில்லை" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், 'துரந்தர்' திரைப்படம் ஒரு அரசியல் பிரச்சாரப் படம் என்ற விமர்சனங்களை மறுத்த அவர், பாகிஸ்தானைப் பின்னணியாகக் கொண்டு நாட்டின் பாதுகாப்பை மையமாகக் கொண்ட கதையே அத்திரைப்படம் என்றும், இந்தியாவை நேர்மறையான கோணத்தில் உலகிற்கு வெளிப்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை என்றும் கூறினார். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதாபாத்திரங்களை நேர்மையுடன் திரையில் கொண்டு வருவதே தனது பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது நடிகர் மாதவன், 'இந்தியாவின் எடிசன்' என்று அழைக்கப்படும் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் 'ஜிடிஎன்' திரைப்படத்தின் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறார்