

பிரபல இந்தி நடிகையான கீர்த்தி சனோன், நகை கடை விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். ரக் ஷா பந்தனை முன்னிட்டு வெளியான அதில், அவர் அணிந்திருந்த கவர்ச்சியான ஆடையும் தனது செல்ல நாய்க்கு ராக்கி கட்டும் காட்சியும் இடம்பெற்றிருந்தன. இது இணையத்தில் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது. நடிகை கங்கனா ரனாவத்தும் விமர்சித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள கீர்த்தி சனோன் “பண்டிகைகளின் சாராம்சம் அணியும் ஆடைகளில் இல்லை; பாரம்பரியத்தின் மீது கொண்டுள்ள உணர்வுகளிலும் அர்த்தத்திலும்தான் உள்ளது. ரக் ஷா பந்தன் என்பது பாதுகாப்பின் பந்தம். நானும் என் சகோதரியும் ராக்கி கட்டிக்கொள்கிறோம்.
ஒரு சகோதரன் எப்படிப் பாதுகாப்பான உணர்வைத் தருவானோ, அதேபோல் எங்களை நாங்கள் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை அறிவோம். நாங்கள் ஒருவருக்கொருவரின் உடல்நலம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுக்காகப் பிரார்த்தனை செய்கிறோம். இந்தப் பிரார்த்தனையும் வாக்குறுதியும் எங்கள் வீட்டு நாய்களுக்கும் உண்டு. அதுவும் எங்கள் குடும்ப உறுப்பினர்தான். மேலும், பெண்கள் என்ன உடை
அணிய வேண்டும் என்று சொல்வதை எப்போது நிறுத்தப் போகிறோம்? பாரம்பரிய ஃபேஷன் மாறிவிட்டது, ஆனாலும் ஒரு பெண்ணின் கலாச்சாரத்துக்கான மரியாதை அவளது ஆடைகளைக் கொண்டே அளவிடப்படுகிறது. பண்பாடும் பாரம்பரியமும் அவளது ஆடைகளில் இல்லை, இதயத்தில்தான் இருக்கிறது” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், அந்த விளம்பரம் சர்ச்சையானதை அடுத்து அந்த நகைக் கடை நிறுவனம் அனைத்து ஊடகங்களிலிருந்தும் விளம்பரத்தை திரும்பப் பெற்றுள்ளது.