

இந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் பேச்சால் சர்ச்சை உருவாகியுள்ளது. இதனை வைத்து இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் ஹ்ரித்திக் ரோஷன். அப்போது தொகுப்பாளர் அவரை மேடைக்கு அழைத்தார். இந்தச் சமயத்தில் அங்கிருந்தவர்கள் ஹ்ரித்திக் ரோஷனை கைதட்டி ஆர்ப்பரித்து வரவேற்றார்கள்.
இதனை தொடர்ந்து மைக்கில் பேசிய ஹ்ரித்திக் ரோஷன், “நீங்கள் மிகவும் அன்பானவர்கள். உங்கள் அனைவருக்கும் தெரியும். எனது நடிப்பில் கடைசியில் வெளியான படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை தழுவியது. அதனால் உங்கள் அனைவருடைய அன்பை பெறுவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நன்றி” என்று குறிப்பிட்டார். ’வார் 2’ படத்தின் படுதோல்வியை தான் அவர் குறிப்பிட்டு பேசியிருந்தார்.
இந்தப் பேச்சு தான் இணையத்தில் சர்ச்சையாகி இருக்கிறது. யஷ் ராஜ் நிறுவனம் தொடர்ச்சியாக ஸ்பை யுனிவர்சிஸில் பல்வேறு படங்களை உருவாக்கி வருகிறது. இந்தப் பேச்சால் அப்படங்கள் பாதிக்கப்படும் என்று கூறிவருகிறார்கள். மேலும், ‘வார் 2’ படத்தில் ஹ்ரித்திக் ரோஷனுடன் ஜூனியர் என்.டி.ஆரும் நடித்திருந்தார். இந்தப் பேச்சு அவரை பாதிக்கும் எனவும் குறிப்பிட்டு வருகிறார்கள்.