

புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்தவர் தயாரிப்பாளர் குல்ஷன் குமார். இசையமைப்பாளரான இவர் டி சீரிஸ் எனப்படும் பாடல் கேசட்டுகளை தயாரித்து விற்பனை செய்து வந்தார். ஏராளமான புதிய பாடகர்களை பாலிவுட்டில் அறிமுகம் செய்தார். இசை ஆல்பம் தயாரித்து அதில் நடித்தும் வந்தார்.
இந்நிலையில் குல்ஷன்குமார், கூலிப்படையினரால் 1997-ம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார். தாவூத் மெர்ச்சென்ட் என அழைக்கப்பட்ட அப்துல் ராப் குல்ஷன் குமார் கொலையைச் செய்ததாக 2002-ல் நிரூபிக்கப்பட்டது. இதனிடையே ஹனுமன் சாலிசா எனப்படும் ஹனுமன் பக்திப் பாடல்களை பாடிய குல்ஷன் குமாரின் வீடியோ யூடியூபில் கடந்த 2011-ம் ஆண்டு மே 10-ம் தேதி வெளியிடப்பட்டது. அந்த வீடியோ தற்போது 500 கோடி பேருக்கும் அதிகமான நபர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
இந்த வீடியோவில் மறைந்த குல்ஷன் குமார் தோன்றி ஹனுமன் சாலிசாவை, பக்திப் பரவசத்துடன் பாடுகிறார். பாடலை பின்னணிப் பாடகர் ஹரிஹரன் பாட, இசையமைப்பாளர் லலித் சென் இசையமைத்துள்ளார்.இன்றைய நாள் வரை அந்த வீடியோவை 5,008,284,112 பேர் பார்த்துள்ளனர். யூடியூப் வரலாற்றிலேயே உலக அளவில் இத்தனை முறை பார்க்கப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த ஒரே வீடியோ இதுதான்.
அதற்கடுத்தபடியாக பஞ்சாபி பாடலான லெஹங்கா 180 கோடி முறைக்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது. 52 கஜ் கா தாமன், தமிழ்ப் பாடலான ரவுடி பேபி, ஜரூரி தா, வஸ்தே, லாங் லாச்சி, லுட் கயே, தில்பர், பும் பும் போலே போன்ற பாடல்கள் 200 கோடி முறைக்கும் கீழே ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளன.
தமிழில் வெளியான மாரி-2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடலை இதுவரை 170 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர். உலக அளவில் யூடியூபில் பார்க்கப்பட்டு முதல் இடத்தில் இருக்கும் வீடியோ, பேபி ஷார்க் டேன்ஸ் வீடியோதான். இதை 1600 கோடிக்கும் அதிகமான பேர் இந்த வீடியோவைப் பார்த்து ரசித்துள்ளனர்.