

நடிகர் தர்மேந்திரா |சோகத்துடன் மனைவி ஹேமமாலினி
பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா உடல் குறைவால் நேற்று மும்பையில் காலமானார். அவருக்கு வயது 89.
நடிகர் தர்மேந்திராவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன், உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் காலமானதாக அப்போது சில சேனல்கள் செய்தி வெளியிட்டன. இதை அவர் மனைவி ஹேமமாலினியும் மகள் ஈஷா தியோலும் மறுத்திருந்தனர்.
அவர் நலமுடன் இருப்பதாகவும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து தர்மேந்திரா உடல்நிலை தேறியதால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு வீட்டில் சிகிச்சை தொடர்ந்து வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலமானார். அவரது மறைவு திரையுலகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஷோலே படத்தில் அமிதாப் பச்சனுடன் | நடிகை சாயிரா பானுவுடன்
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கலில், “தர்மேந்திராவின் மறைவு இந்திய சினிமாவில் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. தான் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வசீகரத்தையும் ஆழத்தையும் கொண்டு வந்த அற்புதமான நடிகர்.
அவர் மாறுபட்ட வேடங்களில் நடித்த விதம் ஏராளமான மக்களைக் கவர்ந்தது. அதே அளவு அவரது எளிமையும் பணிவும் அரவணைப்பும் போற்றப்பட்டது. இந்த சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் மீது உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு: பஞ்சாப்பின் லூதியானா பகுதியில் உள்ள நஸ்ராலி கிராமத்தில் 1935-ம் ஆண்டு பிறந்தவர் தர்மேந்திரா. கடந்த 1960-ம் ஆண்டு, ‘தில் பி தேரா ஹம் பி தேரே’ படம் மூலம் அறிமுகமான அவர் 1966-ம் அண்டு வெளியான ‘பூல் அவுர் பத்தர்’, ‘ஆயே தின் பாஹர் கே’ ஆகிய படங்களின் மூலம் பிரபலமடைந்தார்.
பாலிவுட்டின் ‘ஹீ-மேன்’ என அழைக்கப்படும் இந்தி சினிமாவில் அதிக வெற்றிப் படங்களில் நடித்த ஹீரோ என்ற சாதனையைப் பெற்றவர். 1973-ம் ஆண்டு 8 ஹிட் படங்களைக் கொடுத்தார்.
1987-ம் ஆண்டு அவர் நடித்து 9 படங்கள் வெளியானது. அதில் அடுத்தடுத்து வெளியான 7 படங்கள் வெற்றி பெற்றன. இந்தி சினிமா வரலாற்றில் இது சாதனையாகும். அமிதாப்பச்சனும், இவரும் சேர்ந்து நடித்த `ஷோலே’ படம் மூலம் இந்தியா முழுவதும் புகழ் பெற்ற தர்மேந்திரா, சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள இக்கிஸ் (Ikkis) என்ற திரைப்படம் டிச.25-ம் தேதி வெளியாக இருக்கிறது. இது அவருடைய கடைசி படம்.
தர்மேந்திரா, சினிமாவில் நுழைவதற்கு முன்பாக, தனது 19-வது வயதில் பிரகாஷ் கவுர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு சன்னி தியோல், பாபி தியோல், விஜேதா தியோல், அஜிதா தியோல் ஆகிய 4 குழந்தைகள். இதில் சன்னி தியோல், பாபி தியோல் இந்தியில் நடித்து வருகின்றனர். 1980-ம் ஆண்டு நடிகை ஹேமாமாலினியை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஈஷா தியோல், அஹானா தியோல் ஆகிய மகள்கள் உள்ளனர். பாஜக சார்பில் ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் தொகுதியில் 2004-ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு வென்றார். மத்திய அரசு அவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு பத்மபூஷண் விருதை வழங்கி கவுரவித்தது.