பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் குப்தா காலமானார்

பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் குப்தா காலமானார்
Updated on: 
1 min read

மும்பை: 'காண்டே', 'ஷூட்அவுட் அட் லோகண்ட்வாலா', 'காபில்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் குப்தா மும்பையில் காலமானார். அவருக்கு வயது 59.

தனது வீட்டில் உள்ள சமையலறையில் மதியம் 2:30 மணியளவில் திடீரெனக் கீழே விழுந்ததில் சஞ்சய் குப்தாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவத்தின் போது அவரது மனைவியும் இரு மகன்களும் வீட்டில் இருந்தபோதிலும், இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை.

பல தசாப்தங்களாக இந்தி திரையுலகில் இயங்கி வந்த சஞ்சய் குப்தா, ஸ்டைலிஷான ஆக்‌ஷன், க்ரைம் த்ரில்லர் திரைப்படங்களை உருவாக்குவதில் முத்திரை பதித்தவர். சஞ்சய் தத்துடனான இவரது கூட்டணி வரவேற்பை பெற்றது. இவர்கள் இருவரும் இணைந்து 'காண்டே' (2002), 'முசாஃபிர்' (2004), 'ஜிந்தா' (2006) மற்றும் 'ஷூட்அவுட் அட் லோகண்ட்வாலா' (2007) உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்தனர்

1991-ல் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான 'ஷூட்அவுட் அட் லோகண்ட்வாலா' திரைப்படத்தை இவர் இயக்கியதுடன், தயாரித்து, இணை எழுத்தாளராகவும் பணியாற்றினார். பின்னர் 2013-ல் 'ஷூட்அவுட் அட் வடாலா' திரைப்படத்தையும் இயக்கி கவனம் பெற்றார்.

இது தவிர ஐஸ்வர்யா ராய் நடித்த 'ஜஸ்பா' (2015), ஹிரித்திக் ரோஷன் நடித்த 'காபில்' (2017) மற்றும் ஜான் ஆபிரகாம் - இம்ரான் ஹாஷ்மி நடித்த 'மும்பை சாகா' (2021) ஆகிய படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.

2001-ஆம் ஆண்டு ஒயிட் ஃபெதர் ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய சஞ்சய் குப்தா, பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். சமீபத்தில் மீசான் ஜாப்ரி மற்றும் ஹர்ஷவர்தன் ராணே நடித்த 'தி மிராண்டா பிரதர்ஸ்', ரிதேஷ் தேஷ்முக் மற்றும் ஃபர்தீன் கான் நடித்த 'விஸ்ஃபோட்' (2024) ஆகிய படங்களை இவர் தயாரித்திருந்தார்.

இயக்குநராகும் முன்பு சவுண்ட் டிசைனிங் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட இவர், பிரபல இயக்குநர் பங்கஜ் பராஷரிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது திடீர் மறைவுக்குப் இந்தி திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் குப்தா காலமானார்
சூர்யாவின் ‘சீன்’ பட ட்ரெய்லர் எப்படி? - ‘கூல் காவல் அதிகாரியின் வேட்டை’

X