

அபூர்வா லக்கியா இயக்கத்தில் சல்மான் கான், சித்ராங்கதா சிங் நடித்துள்ள படம், ‘மாத்ருபூமி: மே வார் ரெஸ்ட் இன் பீஸ்’. இந்திய- சீன பாதுகாப்புப் படை வீரர்களுக்கு இடையே, லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு மோதல் ஏற்பட்டது.
இதில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 38 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த மோதல் சம்பவத்தின் பின்னணியில் ‘மாத்ருபூமி: மே வார் ரெஸ்ட் இன் பீஸ்’ என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்துக்கு முதலில் ‘பேட்டில் ஆஃப் கல்வான்’ என்ற பெயர் வைக்கப்பட்டிருந்தது.
இப்படத்தின் சில பகுதிகள் குறித்து பாதுகாப்பு அமைச்சகம் சில ஆட்சேபனைகளை எழுப்பியதாகவும், கதையில் மாற்றங்களை செய்யக் வலியுறுத்தியதாகவும் கூறப்பட்டது. குறிப்பாக, படத்தில் சீனாவை நேரடியாகக் குறிப்பிடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் படத்தின் சுமார் 40 சதவிகித காட்சிகளை மீண்டும் படமாக்கினர். இதனால் இதன் ரிலீஸ் தாமதமானது.
இந்நிலையில் புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ள காட்சிகளைப் பார்த்த தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக அதிகாரிகள் திருப்தி அடைந்ததாகவும் இதையடுத்து இப்படத்துக்குத் தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர் விரைவில் தணிக்கைக்கு அனுப்ப உள்ளனர். நவ.13-ம் தேதி படத்தை வெளியிட உள்ளனர்.