

சூர்யா, அசின், நயன்தாரா நடித்து சூப்பர் ஹிட்டான படம் `கஜினி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். இந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. ஆமிர்கான் கதாநாயகனாக நடித்த இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸே அங்கும் இயக்கினார். 2008-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் அங்கு சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இந்தப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது சல்மான்கான் என தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், ``சூர்யா நடித்த கஜினி படத்தைப் பார்த்ததும் சல்மான்கான் தான் நினைவுக்கு வந்தார். ‘தேரே நாம்’ படத்தின் முதல் பாதியில் சல்மான் நீண்ட முடியுடன் இருப்பார். இடைவேளைக்குப் பிந்தையகாட்சிகளில், அவர் மனநலம் பாதிக்கப் பட்டவர்களுக்கான ஆசிரமத்தில் அடைக்கப்படும்போது, தலையை மொட்டையடித்து இருப்பார். அவருடைய உடலமைப்பு மற்றும் மொட்டையடித்த தோற்றம் ‘கஜினி’ கதாபாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்தும் என்று நினைத்தேன்.
ஆனால் ரீமேக் உரிமையை வாங்குவதற்காகக் கடுமையாகப் போராடினேன். தமிழ் தயாரிப்பாளரை அணுகிய போது, அந்த உரிமை தெலுங்கு தயாரிப்பாளரான அல்லு அரவிந்திடம் இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக அவர் நண்பரிடம் பேசி வந்தேன். இதற்கிடையில், அப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பிரதீப் ராவத், தமிழ்ப் படத்தை அமீர்கானுக்கு காட்டினார். அமீர் ஒப்புக்கொண்டபோது, அல்லு அரவிந்த் படத்தை தயாரிக்க முடிவு செய்தார். அதனால் நான் அந்த வாய்ப்பை இழந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.