

இந்தித் திரைத்துறையில் படைப்பாற்றல் இல்லாத நபர்களின் கைகளில் அதிகாரம் சென்றுவிட்டதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கவலை தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது: “இந்தித் திரைத் துறையில் படைப்பாற்றல் இல்லாத நபர்களின் கைகளில் அதிகாரம் சென்றுள்ளது. தற்போது அவர்கள்தான் யார் இசையமைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறார்கள்.
இது கடந்த 8 ஆண்டுகளில் மிகப் பெரிய மாற்றத்தைச் சந்தித்துள்ளது. நான் வேலைக்காக யாரையும் தேடிச் செல்வதில்லை. எனது வேலையில் உள்ள நேர்மை எனக்கு வாய்ப்புகளைத் தேடித் தரும் என்று நம்புகிறேன்.
எனக்கு வரும் வாய்ப்புகள் குறைவதற்கு, மதரீதியான பாகுபாடு காரணமாக இருக்கலாம். ஆனால் அது என் முகத்துக்கு நேராக நடக்கவில்லை. என் காதுகளுக்கு தகவல்கள் வருகின்றன.
ஒரு படத்துக்கு சிலர் என்னை ஒப்பந்தம் செய்ய நினைத்தாலும், இசை நிறுவனங்கள் தங்களுக்கு நெருக்கமான ஐந்து இசையமைப்பாளர்களைத் தேர்வு செய்துவிடுகின்றன. பரவாயில்லை, நான் எனது குடும்பத்துடன் நேரம் செலவிடுகிறேன்.
90-களில் ரோஜா, பம்பாய், தில் சே போன்ற படங்கள் புகழ்பெற்றாலும், 'தாள்' திரைப்படம் தான் வட இந்தியாவில் ஒவ்வொரு வீடுகளிலும் என்னுடைய இசையை கொண்டு சேர்த்தது. நான் அப்போது இந்தி பேசியதே இல்லை.
ஒரு தமிழராக நமக்குத் தமிழ் மீது மிகுந்த பற்று இருப்பதால், இந்தி கற்பது கடினமாக இருந்தது. ஆனால் இயக்குநர் சுபாஷ் கய் என்னிடம், 'உனது இசை எனக்குப் பிடிக்கும், ஆனால் நீ இங்கே நீண்ட காலம் நிலைத்து நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதனால் நீ இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்' என்றார்.
அதற்கு நான், 'சரி, நான் இந்தி கற்கிறேன். அதைவிட ஒரு படி மேலே சென்று, இந்தி இசைக்குத் தாயாக விளங்கும் உருது மொழியையும் கற்றுக்கொள்கிறேன் என்று கூறினேன்” என்று ஏ.ஆர்.ரஹ்மான் அந்த பேட்டியில் தெரிவித்தார்.