

நடிகை காஜல் அகர்வால்
தனது ஆரம்ப கால சினிமா பயணத்தில், உடல் தோற்றம் குறித்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டேன் என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். இவர் ஸ்ரேயஸ் தல்படே-வுடன் தற்போது நடித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படம் ஜூலை 24-ல் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இதன் புரமோஷனில் கலந்து கொண்ட காஜல் அகர்வால் கூறும்போது, “நான் சினிமாவுக்கு வந்த காலத்தில் சமூக வலைதளங்கள் இல்லை. ‘ஏர்போர்ட் லுக்’ முதல் ஒவ்வொரு பொது நிகழ்ச்சியிலும் எப்படி இருக்கிறோம் என்று யாரும் ஆராய்ந்து பார்க்கவில்லை. அதனால் சுதந்திரமாக, இயல்பாக இருக்க முடிந்தது. பயணத்தின் போது எப்போதும் முழு மேக்கப்புடன் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அப்போது விமர்சனங்கள் இல்லையா? என்றால் இருந்தன.
ஆனால் அவை பெரும்பாலும் இயக்குநர்களிடம் இருந்து வந்தன. ‘கொஞ்சம் குண்டாக இருங்கள்’, ‘இன்னும் ஒல்லியாக மாறுங்கள்’ என்று சொல்வார்கள். அந்த அழுத்தம் இருந்தது. ஆனால் இப்போது இருப்பதைப் போலக் கொடூரமாக இல்லை. தற்போது அழகுக்கான தரநிலைகள் இரக்கமற்றதாக மாறிவிட்டன. இன்றைய இளம் நடிகைகள் பற்றி எனக்கு உண்மையிலேயே வருத்தமாக இருக்கிறது.
அவர்கள் தங்களின் தனித்தன்மையையும் தன்னம்பிக்கையையும் காத்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். எல்லாவற்றுக்கும் தலையாட்டுவதை விட, தேவையான இடத்தில் ‘இல்லை’ என்று சொல்லக் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம். வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி; இல்லை என்றாலும் அதற்காக என்னை மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை என்ற தெளிவு எனக்கு இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.