

சல்மான் கான்
நடிகர் சல்மான் கான், கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 2 அரிய வகை மான்களை வேட்டையாடியதாகத் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. சர்ச்சைக்குரிய இச்சம்பவத்தின் பின்னணியில் ‘காலா ஹிரன்’ என்ற பெயரில் திரைப்படம் உருவாகிறது.
இதன் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு மற்றும் விளம்பரப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு சல்மான் கான் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
சல்மான் கான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிஜாம் பாஷா, “கடந்த மே 29 அன்று படக்குழு வெளியிட்ட விளம்பர போஸ்டரில், ஒரு கதாபாத்திரம், அச்சு அசலாக சல்மான் கானை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவருடைய அடையாளமாகக் கருதப்படும் பிரேஸ்லெட்டை அணிந்திருப்பது போலவும் காட்டப்பட்டுள்ளது.
இது,சல்மான் கானின் தனித்துவ உரிமைகளைப் பாதுகாத்து, டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நேரடியாக மீறும் செயலாகும்” என்று வாதிட்டார். மேலும் சல்மான் கானின் அடையாளத்தைப் பயன்படுத்தி வணிக ரீதியாக லாபம் ஈட்ட முயல்கின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா, படத்தின் தயாரிப்பாளர் அமித் ஜானி, இயக்குநர் பாரத் ஸ்ரீநாத், காஸ்டிங் இயக்குநர் அக் ஷய் பாண்டே மற்றும் இப்படம் தொடர்புடையவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், இவ்வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணையை ஜூன் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.