“ஆண் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்குவது நான் மட்டுமே”: கங்கனா பெருமித பகிர்வு

“ஆண் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்குவது நான் மட்டுமே”: கங்கனா பெருமித பகிர்வு
Updated on
1 min read

மும்பை: திரைத்துறையில் தான் மட்டுமே ஆண் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்குவதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை பிரியங்கா சோப்ரா ‘ஆண் நடிகர்கள் வாங்கும் சம்பளத்தில் வெறும் 10 சதவீதம் தான் நடிகைகளுக்கு வழங்கப்படுவதாக’ கூறியிருந்தார். மேலும் அப்பேட்டியில் பேசிய அவர், “இதுவரை நான் 60 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். ஆனால் ஒரு படத்தில் கூட ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கவில்லை. இப்போதும் பல நடிகைகள் இதை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.

பிரியங்கா சோப்ராவின் இந்த கருத்துக்கு நடிகை கங்கனா ரணாவத் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த பேட்டியை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள அவர், இது குறித்து பதிவிட்டுள்ளதாவது: "இது உண்மைதான். எனக்கு முன்னால் இருந்த நடிகைகள் இந்த ஆணாதிக்க விதிகளுக்கு அடிபணிந்தனர். ஆண்களுக்கு இணையாக சம்பளம் வேண்டும் என்று முதலில் சண்டையிட்டது நான்தான். அப்போது நான் எதிர்கொண்ட மிகவும் அருவருப்பான விஷயம் என்னவென்றால் என்னுடைய சக நடிகைகள் நான் பேரம்பேசிய கதாபாத்திரங்களில் இலவசமாக நடித்துக் கொடுத்தனர்.

பெரும்பாலான முன்னணி நடிகைகள் மற்ற சில சலுகைகளுக்காக இலவசமாக நடிக்கின்றனர் என்பதை நான் உறுதியாக சொல்வேன். கதாபாத்திரங்கள் சரியான நபர்களுக்கு சென்றுவிடக் கூடாது என்ற அச்சமே இதற்குக் காரணம். இதன்பிறகு அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்று கட்டுரைகளை வெளியிடுகின்றனர். திரைத்துறையில் ஆண் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்குவது நான் மட்டும்தான் என்பது அனைவருக்கும் தெரியும்." இவ்வாறு கங்கனா தனது பதிவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in