Published : 27 May 2023 07:45 PM
Last Updated : 27 May 2023 07:45 PM

“பிரச்சார படங்களுக்கு எதிரானவன் நான்” - ‘தி கேரளா ஸ்டோரி’ படம் குறித்து கமல்

அபுதாபி: “நான் பிரச்சார படங்களுக்கு எதிரானவன்; வெறுமனே ‘உண்மைக் கதை’ என எழுதினால் மட்டும் போதாது. அதில் உண்மை இருக்க வேண்டும்” என ‘தி கேரளா ஸ்டோரி’ படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

23-வது ‘சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி’ (International Indian Film Academy - IIFA Awards) விருது வழங்கும் விழா மே 26,27 ஆகிய இரண்டு நாட்கள் அபுதாபியில் யாஸ் தீவில் உள்ள எதிஹாட் அரங்கில் நடைபெறுகிறது. இந்த விழாவை பாலிவுட் நடிகர்கள் அபிஷேக் பச்சன் மற்றும் விக்கி கவுஷல் தொகுத்து வழங்குகின்றனர்.

இதில் இந்திய சினிமாவில் மிகச்சிறந்த பங்களிப்பை செலுத்தியதற்காக நடிகர் கமல்ஹாசனுக்கு ‘IIFA Outstanding Achievement in Indian Cinema’ எனப்படும் உயரிய விருது வழங்கப்பட்டது. இதையடுத்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கமல்ஹாசனிடம், ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை எப்படி பார்க்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான் முன்பே கூறியது போல பிரச்சார படங்களுக்கு எதிரானவன் நான். வெறுமனே லோகோவுக்கு பக்கத்தில் ‘இது உண்மைக் கதை’ என எழுதினால் மட்டும் போதாது. அதில் உண்மை இருக்க வேண்டும். தி கேரளா ஸ்டோரி படத்தில் காட்டப்பட்டது உண்மையல்ல” என தெரிவித்துள்ளார்.

மேலும், ‘எந்த ஒரு பிரச்சினையிலும் தென்னிந்திய சினிமாவில் உள்ள நடிகர்கள், குறிப்பாக தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட நிலைபாட்டை எடுக்கிறார்கள். ஆனால் பாலிவுட்டில் அப்படியிருப்பதில்லையே’ என கேட்டதற்கு, “இதை நான் ஏளனமாக பார்க்கவோ இது தொடர்பாக கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என கருதுகிறேன். இந்த நாடு முக்கியமானது. அதேபோல அமைதியுடன் உங்கள் கலையை நீங்கள் செய்வதும் முக்கியமானது. 60-70 ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பாவைச் சேர்ந்த பல கலைஞர்கள் ஜெர்மனியில் மௌனம் காக்கும் இதே தவறை செய்தார்கள்” என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x