

மும்பை: தனது இரண்டாவது திருமணம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனம் திறந்துள்ளார் ஆஷிஷ் வித்யார்த்தி. இதுகுறித்து வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள ஆஷிஷ் வித்யார்த்தி (60), அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரூபாலி பருவா (50) என்ற ஆடை வடிவமைப்பாளரை கடந்த மே 25 அன்று திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் எளிய முறையில் வியாழக்கிழமை உறவினர்கள் முன்னிலையில் பதிவுத் திருமணமாக நடந்தது. 60 வயதில் அவர் செய்து கொண்ட இரண்டாம் திருமணம் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது.
இந்த நிலையில், தனது இரண்டாவது திருமணம் குறித்து இன்ஸ்டாகிராமில் மனம் திறந்துள்ளார் ஆஷிஷ் வித்யார்த்தி, அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு பின்னணி, வெவ்வேறு கல்வி, தொழில், சமூக அடுக்கு, நாடுகளிலிருந்து வந்தாலும், நமக்கு இடையே இருக்கும் பொதுவான ஒற்றுமை என்னவென்றால், நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறோம்.
ஒருவருடன் பயணம் செய்ய வேண்டும் என்ற காரணத்துக்காக மட்டுமே அவரை திருமணம் செய்ய வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனவே அதுகுறித்த அறிவிப்பை இந்த பிரபஞ்சத்துக்கு தெரிவிக்கிறேன். என்னுடைய 55வது வயதில் அப்படி ஒருவரை திருமணம் செய்துகொள்ள விரும்பினேன். அப்படித்தான் நான் ரூபாலியை சந்தித்தேன். நாங்கள் நிறைய பேசினோம். ஒரு வருடம் முன்பு தான் நாங்கள் சந்தித்தோம். பின்னர் எங்களுக்கிடையே சுவாரஸ்யமான ஒற்றுமை இருப்பதை கண்டறிந்தோம். நாங்கள் இருவரும் கணவன் - மனைவியாக பயணிக்கலாம் என்று எங்களுக்கு தோன்றியது. எனவே தான் நானும் ரூபாலியும் திருமணம் செய்து கொண்டோம்.
இவ்வாறு ஆஷிஷ் வித்யார்த்தி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.