

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சல்மான் கான் மீண்டும் திரும்பியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தவறாக நடப்பவர்களுக்கு பிற்பாடு வேலை எதுவும் கிடைப்பதில்லை என்று கூறுகிறார் சல்மான்.
பிக் பாஸ் இந்தி நிகழ்ச்சியில் சில வேளைகளில் கோபமடைந்துள்ள சல்மான் கான், பிரபலங்கள் தங்கள் மதிப்பை பிக் பாஸ் வீட்டுக்குள் காத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
பிடிஐ-க்கு சல்மான் கான் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:
பிரபலமடைபவர்களுக்கு பொறுப்பு உள்ளது. எனவே நாம் கீழே சென்று விட முடியாது. ஒரு பிரபலஸ்தராக இருந்து கொண்டு சாமானிய மனிதருக்கு மோசமாக வினையாற்றினால் மக்கள் என்ன கூறுவார்கள், “பார் இவரை, இவர் செய்வது சரியல்ல” என்பார்கள், அதே போல் பிரபலமான ஒருவரை சாமானிய மனிதர் கலாய்த்தாலும் மக்கள் இதையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதில்லை ஆகவே பிரபலஸ்தர்கள் தங்கள் ‘இமேஜை’ பாதுகாக்க வேண்டும்.
சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வருவதே தங்கள் கரியரை மீட்டெடுக்கத்தான், ஆனால் பிக் பாஸ் வீட்டினுள் நன்றாக நடந்து கொள்பவர்கள்தான் கரியரில் நீண்ட தூரம் செல்ல முடியும்.
பிக் பாஸ் வீட்டினுள் சரியாக நடந்து கொள்ளாதவர்கள் வெளியில் கரியரில் பெரிய அளவுக்கு முன்னேற முடிவதில்லை, இவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்பதையே நாம் பார்க்கிறோம்
கடந்த முறை நான் போட்டியாளர் ஒருவரை (ஸ்வாமி ஓம்) வெளியேற்றினேன். ஆனால் அதற்கு எனக்கு ஆதரவே இருந்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில் இந்த நிகழ்ச்சியைப் பிடிக்காதவர்களையும் பார்க்க வைக்க முயற்சி செய்கிறோம். இது மிகக் கடினம். சில சீசன்கள் ஓடியும் மக்களில் சிலருக்கு இந்த நிகழ்ச்சி பிடிப்பதில்லை. நான் விமர்சனங்களைப் படிப்பதில்லை, அது என்னை பாதிப்பதும் இல்லை. இப்போது கூட என்னைப் பற்றி மிக மோசமாக எழுதி வருகிறார்கள். நான் பாதிப்படைவதில்லை, காரணம் நான் அவற்றைப் படிப்பதில்லை.
யார் வேண்டுமானாலும் இந்த ஷோவை நடத்த முடியும். யார் நடத்துகிறார்கள் நானா இல்லை வேறொருவரா என்பது முக்கியமல்ல போட்டியாளர்கள்தான் முக்கியம்.
இவ்வாறு கூறினார் சல்மான் கான்.