

வாழ்க்கையில் அடைய வேண்டிய இலக்காக, பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் என்று இளைய தலைமுறைக்கு நடிகர் ஷாருக் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஸ்டார் ப்ளஸ் சேனலில் ஒளிபரப்பாக உள்ள 'டிஇடி டாக்ஸ் இந்தியா - நயி சோச்' என்னும் டாக் ஷோவுக்கான செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஷாருக் இவ்வாறு கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், ''பணம் எப்போதுமே எல்லாவற்றையும் செய்துவிடாது.
இப்போது நான் தொழில்ரீதியாகவும், பணரீதியாகவும், ஏன் உணர்ச்சிபூர்வமாகவும் நன்றாக இருக்கிறேன். கடவுள் என்னிடம் அன்பாக இருக்கிறார்.
பணத்தின் மீதான காதலால் இதுவரை நான் எந்த செயலையும் மேற்கொண்டதில்லை. இதனை நான் மிடில் கிளாஸ் மனநிலையில் இருந்தே சொல்கிறேன். மக்கள் என்னைத் தொழிலதிபர் என்று நினைக்கலாம். ஆனால் பணத்துக்காக நான் எதையும் செய்வதில்லை. எனக்குப் பிடித்த காரியங்களை மட்டுமே செய்கிறேன்.
இளைஞர்கள் தங்களின் இலக்குகளை அடையப் போராட வேண்டும். அதில் பணத்தை கடைசி இடமாகவே மட்டுமே வைக்க வேண்டும். வேலை, காதல், தொழில் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்'' என்று ஷாருக் தெரிவித்தார்.