

மின்சாரம், மின் தட்டுப்பாடு, மின் வெட்டு, மின் திருட்டு... இந்தியாவில் பிறந்தவர்களுக்கு மிகவும் பழகிப்போன வார்த்தைகள் இவை. இதில், வடஇந்தியாவிலுள்ள கான்பூர் நகரில் நடக்கும் மின் திருட்டு பற்றி ஒரு படம் எடுத்தால் யார் பார்ப்பார்கள்?
ஏதோ ஒரு திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு திரும்பி பார்க்காமல் போய்விடுவார்கள் என்று நினைத்தால், இந்த 'கட்யாபாஸ்' (Katiyabaaz) திரைப்படம் மிரள வைத்திருக்கிறது.
80 நிமிடங்கள் ஓடும் டாக்குமென்ட்ரி பாணியில் அமைந்துள்ள இப்படத்தை, தயாரித்திருப்பது பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் 'ஃபான்டோம் ஃபிலிம்ஸ்'.
தீப்தி கக்கர், ஃபஹத் முஸ்தஃபா சேர்ந்து இயக்கியுள்ள இப்படம், கான்பூரில் இருக்கும் 18 மணி நேர மின் தட்டுப்பாடு பற்றியும், அதனால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் பேசுகிறது.
மின் தட்டுப்பாட்டை போக்க களத்தில் குதிக்கும் கான்பூர் மின்சார வாரியத் தலைவராக ரிது மகேஸ்வரியும், இதேப் பிரச்சனையை தனது கையில் எடுத்துக்கொண்டு, பொதுமக்களை காக்க வரும் சூப்பர் ஹீரோவாக மின்சார திருட்டில் கலக்கும் லோஹா சிங்கும் முக்கிய கதாபாத்திரங்களாக வலம் வருகின்றனர்.
தேசிய திரைப்பட விருது, மும்பை திரைப்பட விருது 2013 உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருக்கும் இத்திரைப்படம், உயரிய சர்வதேச திரைப்பட விழாவான சன்டான்ஸ் திரைப்பட விழாவிலும் சிறந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 22-ம் தேதி வெளிவரவிருக்கும் இத்திரைப்படத்தை, மக்கள் மத்தியில் அழுத்தமான அதிர்வலைகளை ஏற்படுத்த நிறைய வாய்ப்பு உண்டு.
கட்யாபாஸ் - ட்ரெயலர்: