

பாடல்களின் தரத்தையும், கவித்துவத்தையும் இந்திப் பாடல்கள் இழந்து வருவதாக பிரபல பாடகரும் பத்ம ஸ்ரீ விருது பெற்றவருமான குமார் சனு வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியபோது, ''பாலிவுட்டை விட, பிராந்திய மொழி சினிமாக்களில் பாட நான் அதிகம் ஆர்வமாக இருக்கிறேன். சமீபத்திய காலங்களில் இந்திப் பட பாடல் வரிகள் மிகவும் மோசமாக இருக்கின்றன.
1990களின் பாடல்களோடு ஒப்பிடும்போது, தற்போதைய பாலிவுட் பாடல்கள் தங்கள் கவித்துவத்தை இழந்து வருகின்றன. அந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். அழகான கவிதைத்தன்மை, மெல்லிசையோடு ஆத்மாவை அவை ஆற்றுப்படுத்திய விதத்தை எண்ணிப் பார்க்கிறேன்.
ஆனால் தற்போது கேட்கும் இந்திப் பாடல்களில் பெரும்பாலானவை உங்களின் உடலை மோசமாக்குகின்றன. இதனோடு ஒப்பிட்டால் பிராந்திய மொழிப் படப் பாடல்கள் சிறப்பாக இருக்கின்றன.
இப்படிப் பேசுவதால், நான் நவீன இசைக்கு எதிரானவன் என்று அர்த்தம் இல்லை. மாற்றம் ஒன்றுதான் மாறாதது. இசை காலத்துக்கு ஏற்றாற்போல மாறவேண்டும். ஆனால் ஒன்றை மட்டும் எப்போதுமே நினைவில் கொள்ள வேண்டும். பாடல்கள் எப்போதுமே இசையையும் வரிகளையும் பொறுத்தே அமைகின்றன.
இன்றைய கால மக்கள் நல்ல பாடல்களை உருவாக்குவதில்லை என்று கூறவில்லை. வெகுசில சமயங்களில் மட்டுமே அத்தகைய பாடல்கள் இருக்கின்றன. 90களில் 10-க்கு 9 நல்ல பாடல்கள் இருந்தால், இப்போது 2 நல்ல பாடல்கள் மட்டுமே வெளிவருகின்றன'' என்றார் குமார் சனு.