

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் 'பத்மாவதி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
'பாஜிராவ் மஸ்தானி' படத்தைத் தொடர்ந்து சஞ்சய் லீலா பன்சாலி பெரும் பொருட்செலவில் உருவாக்கி வரும் 'பத்மாவதி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்கு இந்தி திரையுலகினர் பெரும் வரவேற்பு தெரிவித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
தீபிகா படுகோன், ஷாகித் கபூர், ரன்வீர் சிங், அதிதி ராவ், சோனு சூட் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்து வருகிறார். இயக்குநராக மட்டுமன்றி பாடல்களையும் எழுதியுள்ளார் சஞ்சய் லீலா பன்சாலி.
இப்படத்தை பன்சாலி புரொடக்ஷன்ஸ் மற்றும் வைகாம் 18 பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது. டிசம்பர் 1-ம் தேதி இப்படம் திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.
முன்னதாக ஜெய்ப்பூரில் ‘பத்மாவதி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரி ஆர்பாட்டக்காரர்கள் படப்பிடிப்பு அரங்கிற்குள் நுழைந்து அடித்து நொறுக்கியதோடு, இயக்குநர் சஞ்சய்லீலா பன்சாலியையும் தாக்கினர். இதனால் பெரும் சர்ச்சை உருவாகி, இந்தி திரையுலகினர் பலரும் தங்களுடைய கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.