

பாலியல் பலாத்கார வழக்கில் பெயில் கிடைக்காததால், இந்தி திரைப்பட தயாளிப்பாளர் கரீம் மொரானி வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஹைதராபாத், ஹயாத் நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
ஷாருக்கான், தீபிகா படுகோன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'சென்னை எக்ஸ்பிரஸ்'. வணிகரீதியாக இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தினை தயாரித்தவர் கரீம் மொரானி. இவர் ஷாருக்கான் நடித்த 'ரா-ஒன்' உள்ளிட்ட சில படங்களையும் தயாரித்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த 25 வயது பெண்மணி கொடுத்த புகாரின் அடிப்படையில், மொரானி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. திரைப்படத்தில் நடிக்கும் ஆர்வமுள்ள அந்த பெண்மணி, தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றிவிடுவதாக மிரட்டி, மொரானி தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டினார்.
அவர் கொடுத்த புகாரின்பேரில், கரீம் மொரானி மீது கடந்த ஜனவரி மாதம் பாலியல் பலாத்காரம், அச்சுறுத்தல், அடைத்து வைத்தல், திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.
ஹைதராபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தனக்கு பெயில் வழங்கக் கோரி மொரானி அளித்த மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அன்று தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து கரீம் மொரானி வெள்ளிக்கிழமை நள்ளிரவு சரண்டர் ஆனார்.