“அவர்களுக்கு அறிவே இருக்காதா?” - ஹார்மோன் ஊசி பயன்பாடு குறித்து ஹன்சிகா ஆவேசம்

“அவர்களுக்கு அறிவே இருக்காதா?” - ஹார்மோன் ஊசி பயன்பாடு குறித்து ஹன்சிகா ஆவேசம்

Published on

ஹார்மோன் ஊசிகளை பயன்படுத்தியாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு, ‘லவ் ஷாதி ட்ராமா’ என்ற தனது திருமண வீடியோவில் நடிகை ஹன்சிகா மறுப்பு தெரிவித்துள்ளார்.

நடிகை ஹன்சிகா மோத்வானிக்கும் சோஹேல் கதுரியாவுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. ‘லவ் ஷாதி ட்ராமா’ என்ற பெயரில் அவர்களின் திருமண வீடியோ உரிமையை கைப்பற்றியுள்ள டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி முதல் எபிசோட்டை வெளியிட்டது. இரண்டாவது எபிசோட் நேற்று வெளியானது. ஹன்சிகா திருமண வீடியோ எபிசோடுகள் வார வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என ஹாட்ஸ்டார் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த எபிசோட்டில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஹன்சிகா பேசியிருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பாலிவுட்டில் வெளியான ‘ஷக லக பூம் பூம்’, ‘கோய் மில்கயா’ படங்களில் மூலம் திரைத்திறையில் அடியெடுத்து வைத்தார். அவர் வேகமாக வளர்வதற்காக ஹார்மோன் ஊசி செலுத்தியதாக ஹன்சிகாவின் தாயார் மீதான குற்றச்சாட்டை அவர் இந்த வீடியோவில் மறுத்துள்ளார். “பிரபலமாக இருப்பதால் வரும் பிரச்சினைகள் இவை. எனக்கு 21 வயதாக இருந்தபோது இப்படிப்பட்ட முட்டாள்தனத்தை எழுதினார்கள். எனக்கு 8 வயது இருக்கும்போதே நான் நடிகையாகிவிட்டேன்.

நான் சீக்கிரம் பருவ வயதை எட்ட எனது தாயார் எனக்கு ஹார்மோன் ஊசியை செலுத்தியதாக பலரும் குற்றம்சாட்டினர். அது உண்மையாக இருந்தால், நான் டாடா, பிர்லாவை விட பணக்காரராக இருக்க வேண்டும். அவர்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட அறிவே இருக்காதா? நாங்கள் பஞ்சாபியர்கள். எங்கள் மக்கள் 12-16 வயதுக்குள் பருவமெய்திவிடுவார்கள்” என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in