Last Updated : 07 Feb, 2023 05:52 PM

Published : 07 Feb 2023 05:52 PM
Last Updated : 07 Feb 2023 05:52 PM

பாலிவுட்டுக்கு மட்டுமல்ல... பாக்ஸ் ஆபிஸுக்கும் ‘பாட்ஷா’ - ஷாருக்கான் ‘பதான்’ மூலம் மீட்டெடுத்தது என்ன?

ஷாருக்கான் நடிப்பில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘பதான்’ திரைப்படம் விரைவில் ரூ.1000 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘நீங்க மட்டும் அவன் குறுக்க போயிடாதீங்க சார்...’ என்ற ‘கேஜிஎஃப்’ வசனம் ‘பாய்காட்’ ட்ரெண்ட் மூலம் தாங்கள் நினைத்தை சாதித்து படங்களை படுதோல்வி ஆக்கியவர்களுக்கு எழுதப்பட்டது போல தற்போது கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.

‘பேஷரம் ரங்’ பாடலின் காவி உடையை காரணம் காட்டி ‘பதான்’ படத்தையும் ‘பாய்காட்’ புயலில் புதைத்துவிடலாம் என எண்ணியவர்களுக்கு, ‘வந்துட்டான் வந்துட்டான்.. வந்துட்டான்’ என ‘மாஸ்’ கம்பேக் கொடுத்திருக்கிறார் ஷாருக்கான். அவரின் இந்த வெற்றி என்பது பாலிவுட்டுக்கான மீட்சி மட்டுமல்ல அவரின் சொந்த மீட்சியும் கூட. அதைத்தான் ஷாருக்கான் ‘சினிமாவில் மீண்டும் எனக்கு வாழ்க்கை கொடுத்ததற்கு நன்றி’ என ‘பதான்’ வெற்றி விழாவிலும் குறிப்பிட்டிருந்தார்.

கரோனாவுக்கு பிறகான பாலிவுட்டின் நிலைமை என்பது கங்கனா ரணாவத்தின் ‘தக்கட்’ படத்திற்கு ஏற்பட்ட நிலைமைதான். அதாவது ரூ.85 கோடி பட்ஜெட்டில் உருவான ஒரு படம் ரூ.2.5 கோடியை மட்டுமே வசூலித்து சந்தித்திருந்திருக்கும் நஷ்டம் போலத்தான் கரோனாவுக்கு பிறகான பாலிவுட்டின் நிலைமை இருந்தது. இதனை அந்த திரையுலகினரே ஆமோதித்தனர். காரணம் கரோனா காலக்கட்டத்தில் மக்களின் ரசனை என்பது பரிணாமமடைந்து பல்கிபெருகியது. குழந்தையாக இருந்த ஓடிடி கரோனாவைத் தின்று அசுர வளர்ச்சியடைந்தது.

மக்கள் புது கன்டென்டுகளை தேடித்தேடி பார்க்க தொடங்கினர். உண்மையில் ‘கேஜிஎஃப்’ படக்குழுவினர் கலர்ஸ் தொலைக்காட்சிக்கும், ஓடிடிக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும். கன்னட படமான ‘கேஜிஎஃப்’வின் வளர்ச்சி திரையரங்கில் நிகழ்ந்ததல்ல; மாறாக வீட்டில் உருவானது. அப்படிப்பார்க்கும்போது புதுப்புது கன்டென்டை நோக்கி நகரும் மக்களிடம் ‘தாகத்’, ‘பிருத்விராஜ் சாம்ராட்’, ‘பச்சன் பாண்டே’, ‘ஷம்ஷேரா’ படங்கள் எடுபடவில்லை. கடந்த 2022-ம் ஆண்டு பாலிவுட்டை படுகுழியில் தள்ளியது. இது ஒருபுறமிருந்தாலும், வெறுப்பு பிரசாரத்தின் கையும் ஓங்கி ‘பாய்காட்’ சூழலில் ‘லால்சிங் சத்தா’ போன்ற படங்களும் சிக்காமலில்லை.

தனது முந்தைய படங்களின் பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டை தானே முறியடித்து பாலிவுட்டின் வசூல் அரசனாக வலம் வந்தவர் ஆமீர்கான். இன்றளவும் 2016-ம் ஆண்டு வெளியான ‘தங்கல்’ படத்தின் ரூ.2000 கோடி வசூலை 5 ஆண்டுகளாகியும் யாராலும் முறியடிக்க முடியவில்லை. ‘தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ படத்தின் முதல் நாள் வசூலான ரூ.52 கோடி தான் இன்றும் பாலிவுட்டின் அதிகபட்ச ஓப்பனிங். அப்படிப்பட்ட பாக்ஸ் ஆபிஸ் ஜாம்பவான் ஆமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றும் வசூல் ரீதியாக வெறுப்பு பிரசாரத்தால் நஷ்டத்தை சந்தித்தது.

அப்படியான ஒரு வெறுப்பு ஃபார்மூலா மூலம் 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரைக்கு திரும்பும் ஷாருக்கின் ‘பதான்’ படத்தை முடக்கிவிடலாம் என எண்ணியவர்கள் கையிலெடுத்த ஆயுதம் ‘பேஷரம் ரங்’. ஆனால், அந்தப் பாடலில் இடம்பெற்றிருந்த காவி நிறம் நீக்கப்படாமல் படம் வெளியானது. (உண்மையில் படம் தேசபக்தியை வலியுறுத்தியே அமைக்கப்பட்டிருந்தது வெறுப்பு பிரசாரத்தினருக்கு ‘பதான்’ படக்குழு மறைமுகமாக கொடுத்த பதிலடி). ரூ.225 கோடி பட்ஜெட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம்.

அதே எதிர்பார்ப்புடன் இன்றளவும் முன்னேறி வருகிறது. உலக அளவில் ரூ.900 கோடியை நெருங்கிவருகிறது ‘பதான்’. ஷாருக்கானிற்கு இதைவிட ஒரு சிறந்த கம்பேக் இருக்க முடியாது. ‘காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு கர்ஜனையவிட பயங்கரமா இருக்கும்’ என்ற வசனத்திற்கேற்ப ‘பாய்காட்’, மதவெறுப்பு பிரசாரம் என எதிலும் சிக்காமல்
வெற்றியடைந்திருக்கிறது படம்.

‘பதான்’ படத்தின் வெற்றி கொண்டாடப்பட முக்கியமான காரணம் ‘ஒரு காலத்தில் ஓஹோன்னு வாழ்ந்த குடும்பம்’ என்பதைப்போல ஓஹோவென இருந்த பாலிவுட்டின் ரெக்கார்டுகளை தென்னிந்திய டப்பிங் படங்கள் அசால்ட்டாக அடித்து நொறுக்கின. பாலிவுட் பார்வையாளர்கள் தங்கள் திரைப்பசிக்கு ‘ஆர்ஆர்ஆர்’, ‘கேஜிஎஃப்’ படங்களை விழுங்கி செரித்தன.

கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ஆமீர்கானின் தங்கல் ‘ரூ.387.38’ இந்தியாவில் மட்டும் வசூலித்து புதிய மைல்கல்லை உருவாக்கியிருந்தது. உச்சபட்ச சாதனையாக இருந்த இந்த வசூலை ரன்பீர்கபூரின் ‘சஞ்சு’ நெருங்க நினைத்து ரூ.342.53 கோடியில் சுருண்டது. இந்திய பாக்ஸ் ஆபிஸின் ராஜா என பாலிவுட் பெருமையடித்துக் கொண்டிருந்த தருணத்தில் ‘பாகுபலி 2’ ரூ.511 கோடியுடன் இந்திய சினிமாவில் புதிய மைல்கல்லை ஏற்படுத்தியது.

அடுத்தடுத்து வந்த ‘ஆர்ஆர்ஆர்’, ‘புஷ்பா’, ‘கேஜிஎஃப் 2’ படங்கள் இந்தி மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தின. வசூலில் பின்தங்கிய நிலையில், கன்டென்டிலும் பலவீனமான பாலிவுட்டுக்கு 2023-ல் விடிவுகாலம் பிறக்கும் என கருதிய நிலையில் இந்தி சினிமாவின் முதல் ரூ.400 கோடி க்ளப்பை ஷாருக்கானின் ‘பதான்’ திறந்து வைத்துள்ளது. வரும் காலத்தில் படம் வசூலில் புதிய சாதனை படைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஷாருக்கானின் இந்த வெற்றி பாலிவுட்டுக்குமானது மட்டுல்ல; அவருக்குமானதும் கூட. காரணம் ஷாருக்கானின் முந்தைய படங்களான ‘ஹாப்பி நியூ இயர்’, ‘தில் வாலே’, ‘ஃபேன்’, ‘டியர் ஜிந்தகி’, ‘ஹீரோ’ படங்கள் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. ரசிகர்களும் அவரது கம்பேக்கை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்த வேளையில் 2023 ஷாருக்கானுக்கு அமோகமாக தொடங்கியிருக்கிறது. மேலும் வெறுப்பு பிரசாரத்திற்கான முற்றுபுள்ளியாக இது இருக்குமா என்ற கேள்வியும் கூடவே எழுந்துள்ளது.

தவறவிடாதீர்!


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x