

நடிகை ஜோதிகா 1998-ம் ஆண்டு இந்தி படம் ஒன்றில் அறிமுகமானார். பிறகு தமிழுக்கு வந்துவிட்டார். 25 வருடங்கள் கழித்து ‘ஸ்ரீ’ என்ற இந்தி படத்தில் இப்போது நடித்து வருகிறார். பார்வையற்ற தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கை கதையான இதில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சியின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
இதையடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில், “இந்தப் படத்துக்கான எனதுபகுதி படப்பிடிப்பை முடித்துவிட்டு கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன். இந்த அர்த்தமுள்ள திரைப்படத்தில் என்னையும் ஒரு பகுதியாக இணைத்ததற்கு இயக்குநர் துஷார் ஹிராநந்தனி மற்றும் தயாரிப்பாளர் நிதிக்கு நன்றி. இதன் நாயகன் ராஜ்குமார் ராவின் தீவிர ரசிகை நான். இந்தி சினிமாவின் மிகச்சிறந்த நடிகர் ஒருவருடன் திரையை பகிர்ந்துகொள்வதில் எனக்கு பெருமை. உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்” என்று ஜோதிகா நெகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார்.