‘செல்ஃபியா எடுக்குற...?’ - ரசிகரின் சொல்போனை தூக்கி வீசிய ரன்பீர் கபூர்

‘செல்ஃபியா எடுக்குற...?’ - ரசிகரின் சொல்போனை தூக்கி வீசிய ரன்பீர் கபூர்
Updated on
1 min read

செல்ஃபி எடுக்க வந்த ரசிகரின் செல்ஃபோனை பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தூக்கி எறியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘பிரம்மாஸ்திரா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கும் படம் ‘தூ ஜூதி மெயின் மக்கார்’ (Tu Jhoothi Main Makkaar). பாலிவுட்டில் பிஸியாக இருக்கும் அவரின் இன்றைய செயல் ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

செல்ஃபி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை அவர் தூக்கி எறியும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவை பொறுத்தவரை, அதில் ரசிகர் ஒருவர் ரன்பீர் கபூருக்கு அருகில் நின்றுகொண்டு செல்ஃபி எடுக்க முயல்கிறார். ரன்பீரும் ஆரம்பத்தில் செல்ஃபிக்கு இசைவு கொடுக்க, இரண்டு, மூன்று முறை க்ளிக் செய்தும் புகைப்படம் விழாத காரணத்தால், தனது மொபைலை ரசிகர் பரிசோதித்து பார்க்கிறார். அப்போது அந்த செல்ஃபோனைக்கேட்கும் ரன்பீர் கபூர் அதை வாங்கி தூக்கி எறிந்துவிடுகிறார்.

இந்த வீடியோ வைரலாகி வருவது மட்டுமல்லாமல், ‘ஆங்கிரி ரன்பீர் கபூர்’ (#angryranbirkapoor) என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது. மேலும், ‘சிலர் ரன்பீரின் இந்த மோசமான நடவடிக்கை அவர் மீதான மரியாதையை சீர்குலைத்துவிட்டது’, ‘ரன்பீர் திமிர் பிடித்தவர்’ என்று கருத்துகளை தெரிவித்துள்ளனர். ஆனால் மற்றொரு தரப்பில், இது ஒரு விளம்பர யுக்தி தான் என்றும், ஏதாவது செல்ஃபோன் விளம்பரத்திற்காக இப்படியான வீடியோவை வேண்டுமென்றே எடுத்து ட்ரெண்டாக்கி வருகின்றனர் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

சிலர், ‘அந்த ரசிகருக்கு புது மொபைல் உறுதி’ என்கின்றனர். எப்படியிருந்தாலும் இப்படியான ஒரு எதிர்மறை வீடியோக்கள் மூலம் தேடும் விளம்பரம் தேவையா? என சிலரும் தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in