

லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ படம் இந்தியில் ‘போலா’ என்ற பெயரில் ரீமேக்காகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள படத்தின் இரண்டாவது டீசர் நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் ‘கைதி’. வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருந்தார். ரூ.25 கோடி பட்ஜெட்டில் உருவான படம் ரூ.100 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது.
இந்தப் படம் இந்தியில் ‘போலா’ என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. இதனை பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இயக்கியுள்ளார். மேலும், அவரே நடித்தும் தயாரித்தும் இருக்கும் இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. நாயகியாக தபு நடித்துள்ள இப்படத்தின் இரண்டாவது டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
டீசர் எப்படி? - லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ பிரச்சினையை மையமாக கொண்டு அதன் போக்கில் மிகையில்லாமல் விறுவிறுப்பாக நகரும். ஆனால், ‘போலா’ படத்தின் டீசரை பொறுத்தவரை அதன் அதீத ஹீரோயிசமும், அமெச்சூரான விஎஃப்எக்ஸ் காட்சிகளும் துருத்திக்கொண்டு நிற்கின்றன. கூடவே ஆன்மிகத்தின் நெடி தூக்கலாக்கப்பட்டு ஒரிஜினல் கதையின் ஆன்மாவிலிருந்து மொத்தமாக விலகியிருக்கிறது டீசர். மார்ச் 30-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் டீசர் குறித்து நெட்டிசன்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
நெட்டிசன் ஒருவர் ட்விட்டரில், ‘லோகேஷ் கனகராஜ் போலா டீசரைப் பார்த்துவிட்டு என்ன ரியாக்ஷன் கொடுப்பார் என்பதை மீம் டெம்ப்ளேட்டுடன் பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர், ‘அகாண்டா’ ரீமேக் போல உள்ளது என தெரிவித்துள்ளார்.
துரை சிங்கம் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “டீயர் பாலிவுட் தயவு செய்து ரீமேக் என்ற பெயரில் நல்ல படங்களை ஸ்பாயில் செய்ய வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.