

பிரபல இந்தி நடிகர் சங்கி பாண்டே. இப்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சாஹோ மூலம் தென்னிந்திய சினிமாவுக்கு வந்த அவர், தமிழில் கார்த்தியின் ‘சர்தார்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவர் மகள் அனன்யா பாண்டே, இந்தியில் நாயகியாக நடித்து வருகிறார். ‘லைகர்’ படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்திருந்தார். சங்கி பாண்டே கூறியதாவது:
‘சர்தார்’ படத்தில் நடித்தது சிறந்த அனுபவம். தென்னிந்தியாவில் சிறந்த படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. ‘பொன்னியின் செல்வன்’, ‘கே.ஜி.எஃப் 2’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘மாநாடு’ உள்ளிட்ட படங்களைப் பார்த்து ரசித்தேன். மலையாளம், கன்னட சினிமாவிலும் பணியாற்ற விரும்புகிறேன். சினிமாவுக்கு தெரிந்த ஒரே மொழி, சினிமாதான். நாங்கள் கனவுகளை விற்கவே இருக்கிறோம். என் மகள் அனன்யாவும் சினிமாவில் இருப்பதில் மகிழ்ச்சி. இப்போதெல்லாம் அவரிடம் இருந்து அதிகம் கற்றுக்கொள்கிறேன். 1987ம் ஆண்டு சினிமாவுக்கு வந்தேன். இப்போது 2023. சினிமா மாறிவிட்டது. பார்வையாளர்கள் மாறிவிட்டார்கள். அதனால் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கற்றுக்கொள்ளும் வரை நாம் வாழ்வோம். இவ்வாறு சங்கி பாண்டே கூறினார்.