

'தங்கல்' படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் சல்மான் கான், தொழில்முறையில் ஆமிர்கானை வெறுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கே உரிய பாணியில், ஆமிர்கானின் ஆற்றலுக்கு சல்மான் கான் புகழாரம் சூட்டிய விதம், நெட்டிசன்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ஆமிர்கான் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'தங்கல்'. ஆமிர்கான் தயாரித்துள்ள இப்படத்தை டிஸ்னி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகி இருக்கும் இப்படத்தை தனது திரையுலக நண்பர்கள் உள்ளிட்ட பலருக்கும் திரையிட்டுக் காட்டியுள்ளார் ஆமிர்கான்.
திரையுலக பிரபலங்கள் பலரும் 'தங்கல்' படம் குறித்து தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில், இப்படம் குறித்து இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான் கான், "எனது குடும்பத்தினர் மாலையில் 'தங்கல்' படத்தைப் பார்த்தனர். அது 'சுல்தான்' விட சிறப்பாக இருப்பதாகக் கூறினர். தனிப்பட்ட முறையில் உங்களை விரும்புகிறேன் ஆமிர். ஆனால், தொழில்முறையில் வெறுக்கிறேன்" என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிப்புத் துறையில் ஆரோக்கியமான போட்டியாகப் பார்க்கும்போது, தன்னை விட ஆமிர்கான் சிறந்து விளங்குவதையே 'தொழில்முறையில் வெறுக்கிறேன்' என்று சல்மான் கான் குறிப்பிடுகிறார்.
சல்மான் கானின் இந்தப் புகழாரப் பதிவை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர். இந்தி திரையுலகினரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது சம்லான் கானின் அணுகுமுறை.
சல்மான் கானின் ட்வீட்டுக்கு பதில் அளித்துள்ள ஆமிர்கான், "சல்லு, உங்களது வெறுப்பில் நான் அன்பை மட்டுமே உணர்கிறேன்" என்று கூறியிருப்பதும் சிறப்பு.
தங்கல் என்றால் யுத்தம் என்று பொருளாம். இங்கே போட்டியாளர்களாக கவனிக்கப்படும் இருவர் நிஜத்தில் அன்பால் யுத்தம் நடத்துவதாகவும் நெட்டிசன்கள் பேசிக்கொள்கிறார்கள்!